ஹைதராபாத் : நடைபெற உள்ள தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களின் பெயர் மாற்றப்படும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ராஜா சிங் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா சட்டசபைக்கு டிசம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக இறங்கியுள்ளன. பாஜகவும் தங்களது கொடியை இந்த மாநிலத்தில் பறக்க விடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது.
வாக்காளர்களை கவர்வதற்காக விதவிதமான வாக்குறுதிகள் அளிக்கப்படும். பாஜகவின் தெலுங்கானா மாநிலத் தலைவர் ராஜா சிங் தங்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தால் என்ன செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார். எங்களின் முதல் இலக்கு தெலுங்கானாவின் வளர்ச்சி, அதற்கு அடுத்தபடியாக சில நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டும்.
ராஜா சிங் பாஜகவின் மாநிலத் தலைவர் மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினரும் கூட. பெயர் மாற்றம் பற்றி மேலும் கூறிய அவர் 1590 ல் அலி குதுப் ஷா பாக்யநகர் என்ற பெயரை ஹைதராபாத் என மாற்றினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் மீண்டும் பாக்யநகர் என பெயர் மாற்றப்படும். இதே போன்று செகந்திராபாத் மற்றும் கரீம்நகர் ஆகியவற்றின் பெயர்களும் மாற்றப்படும். முகலாயர்கள் மற்றும் நிஜாம்கள் காலத்தில் மாற்றப்பட்ட பெயர்களும் தெலுங்கானாவிற்காகவும், நாட்டிற்காகவும் போராடியவர்களின் பெயர்களாக மாற்றப்படும் என்றார்.
பாஜகவைச் சேர்ந்தவர்கள் நகரங்களின் பெயர்களை மாற்றுவதாக அறிவிப்பு வெளியிடுவதை அண்மைக் காலமாக பார்க்க முடிகிறது. குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல், ஆமதாபாத் நகரம் கர்னாவதி என மாற்றப்படும் என கூறி இருந்தார். உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பைசாபாத் நகரம் அயோத்யா என பெயர் மாற்றப்படும் எனவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.