சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பான மறு சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த மறு சீராய்வு மனுக்களின் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 28ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்புக்கு எந்த தடையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்புக்கு எதிராக 49 மறு சீராய்வு மனுக்களும், 4 ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தீர்ப்பு என்ன?

மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டத்தின் 14ஆம் பிரிவை மீறுவதாக உள்ளதென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

நீதிபதி தீபக் மிஸ்ரா நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் மற்றும் இந்து மல்கோத்ரா ஆகியோர் அந்த அமர்வில் அங்கம் வகித்தனர்.

தீர்ப்பு என்ன?

பழக்க வழக்கங்களும் நடைமுறையும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டுமென தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கினர்.

சபரிமலை கோயில் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் சொந்தமான கோயில் இல்லை என்பதால் பழைய வழக்கங்களையே பின்பற்ற முடியாது என்று நீதிபதி நாரிமன் தன் தீர்ப்பில் கூறியிருந்தார். பிறப்பின் அடிப்படையில் வழிபாட்டு உரிமையை மறுக்க முடியாது என்றும் பெண்களை நுழைய அனுமதி மறுக்கும் வழக்கம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த அமர்வில் அங்கம் வகித்த பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா, “மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஏனெனில், பிற மத வழிபாட்டு இடங்களிலும் இது பெரிய தாக்கத்தை உண்டாக்கும்,” என்று மாறுபட்ட, சிறுபான்மை தீர்ப்பை அளித்தார். -BBC_Tamil

TAGS: