பேரறிவாளனுக்கு வாழ்த்துச்சொன்ன ரஜினி எப்படி ’எந்த 7 பேர்’ என்று கேட்டார்? : நடந்தது என்ன?

ஏழு பேர் விடுதலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ரஜினிகாந்த் கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.  நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ரஜினியின் இந்த கேள்வி குறித்து கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.   ரஜினி இப்படி பேசிவிட்டார் என்று அவருக்கு எதிராக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தாலும்,   அவர் அப்படிச் சொல்லவில்லை என்றும் சிலர் விளக்கம் அளித்து ரஜினிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.  ரஜினி பேட்டியளித்த அந்த வீடியோ பதிவும் அதற்கு சான்று என்று வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் கேள்வியை சரியாக உள்வாங்கவில்லை.  இன்னொருமுறை கேள்வியை கேட்டிருந்தால் சரியான பதிலை சொல்லியிருப்பார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

 நடந்தது என்ன?

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.   அப்போது அவரிடம்,   ஏழு பேர் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்டதாகவும்,  அதற்கு ரஜினிகாந்த்,  அது குறித்து எனக்கு தெரியாது என்று சொன்னதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை குடியரசு தலைவரிடமே கொண்டு செல்லாமல், மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு,  ‘எந்த 7 பேர்?’ என்று ரஜினி கேட்க,  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் என்று நிருபர்கள் விளக்கியதும்,  ‘இப்போதுதான் பெங்களூரில் இருந்து வந்திருக்கிறேன்.  அது குறித்து எனக்கு தெரியாது.  இப்பத்தான் கேள்விப்படுகிறேன்’ என்று ரஜினி சொல்கிறார்.

குடியரசு தலைவரிடமே கொண்டு செல்லாமல், மத்திய அரசு நிராகரித்துவிட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதை குறிக்கும் வகையில் இது குறித்து எனக்கு தெரியாது என்று கூறினார். ஆனால் இந்த பதிலை,  7 பேர் விடுதலை குறித்தே எனக்கு தெரியாது என்று அவர் கூறியது போல் பேசுகிறார்கள் என்று ரஜினிக்கு ஆதரவுக்கரங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன.

பேரறிவாளன் பரோலில் வந்திருந்தபோது  அவரிடம்,  தொலைபேசியில் பேசி,  விரைவில் நீங்கள் விடுதலை ஆவீர்கள் என்று ஆறுதல் கூறிய ரஜினி எப்படி ஏழு பேர் விடுதலை குறித்து  எதுவும் தெரியாது என்று சொல்லுவார் என்று கேட்கிறார்கள் ரஜினியின் ஆதரவாளர்கள்.

-nakkheeran.in

TAGS: