தமிழகத்தை நெருங்குகிறது ‘கஜ’ புயல்

வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘கஜ’ புயல் தற்போது தமிழகத்தை நெருங்கிவரும் நிலையில், ஏழு மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புயல் நாளை (வியாழக்கிழமை) இரவில் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவரும் கஜ புயல் தற்போது சென்னைக்குக் கிழக்கே 490 கி.மீ. தூரத்திலும் நாகப்பட்டிணத்திற்கு வடகிழக்கே 580 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. தற்போது சுமார் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் இந்தப் புயல் நவம்பர் 15ஆம் தேதியன்று, அதாவது வியாழக்கிழமையன்று இரவில் கடலூருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பனுக்கும் இடையில் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயலின் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சில நேரங்களில் 100 கி.மீ. வேகம்வரை காற்று வீசுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் நாளை துவங்கி அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையில் நாளை துவங்கி அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்யும்.

தற்போது இந்தப் புயல் பத்து கி.மீ. வேகத்தில் நகர்ந்துவந்தாலும் கரையை நெருங்க நெருங்க தரைப்பகுதி காற்றின் வேகத்திற்கு ஏற்ப இந்தப் புயல் நகரும் வேகம் மாறக்கூடும்

Presentational grey line
Presentational grey line

மீனவர்கள் 15ஆம் தேதி கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள். 15, 16ஆம் தேதிகளில் தமிழகத்தின் இதர பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தப் புயல் நாளை கரையைக் கடக்கும் என்பதால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் பகுதியில் உள்ள 49 மீனவ கிராமங்களில் இருந்து எந்த மீனவரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லையென கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்த மாவட்டத்தில் 2600 காவல்துறையினரும் புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிச்சாவரம் பகுதியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரிச்சல்முனைக்குச் செல்ல இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேர்கோடு பகுதியிலேயே வானங்கள் நிறுத்தப்படுகின்றன.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை நெருங்குகிறது 'கஜ' புயல்

இதற்கிடையில் இந்தப் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்து மாநில வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 130 பேர் நெல்லூர் பகுதியில் மீன் பிடித்துவருவதாகவும் அவர்கள் உடனடியாக கரை திரும்ப கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் புயலின் காரணமாக, கரையோரம் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்ப்பட்டிருக்கிறது. புயலால் அதிக மழையைப் பெறக்கூடிய 7 மாவட்டங்களில் உள்ள குடிசை, தகர கொட்டகை, மின் கம்பங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அவற்றைச் சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளை இம்மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டுவருகின்றன.

கடந்த புயல் காலங்களில் தொலைத்தொடர்பின் காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டதால், இந்த முறை அதனை சமாளிக்க முன்கூட்டியே தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இதனால், புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் செல்போன் கோபுரங்கள் தொடர்ந்து இயங்கும்வகையில் ஜெனரேட்டர்களுக்கான டீசல் 5 நாட்களுக்குத் தேவைப்படும் அளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

இந்த கஜ புயலின் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. -BBC_Tamil

TAGS: