நாளை மண்டல பூஜைக்காக நடை திறப்பு.. பெண்களை அனுமதிக்க பினராயி உறுதி.. சபரிமலையில் மீண்டும் பரபரப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கும் முடிவில் பின்வாங்கப் போவதில்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம், என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது அங்கு வருகை தந்த, 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை, பக்தர்களும், இந்து அமைப்பினரும் தடுத்து நிறுத்தி, பெரும் போராட்டங்களை நடத்தினர். இதனால், இந்த வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்ணும் சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழைய முடியவில்லை.

சீராய்வு மனுக்கள்

இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, பல்வேறு அமைப்பினர் , தனிநபர்கள் என, மொத்தம் 48 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, ஜனவரி 22ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் , அதுவரை தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்துவிட்டார்.

மண்டல பூஜை

இந்த நிலையில், கார்த்திகை மாத மண்டல பூஜைக்காக, நாளை நவம்பர் 16ம் தேதி மாலை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இது மிகப்பெரிய பூஜை காலம். இப்போதும் அனைத்து வயது பெண்களுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்தால், பக்தர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் சமரச திட்டம் பற்றி ஆலோசிப்பதற்காக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.

வெளிநடப்பு

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இதில் பங்கேற்றன. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது என்றும், அவர்களை தனியாக சன்னிதானத்திற்கு அனுப்பலாம் என்றும் அரசு தரப்பில், யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்காத காங்கிரஸ், பாஜக தலைவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி

இதன்பிறகு, பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் அதே நேரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல, அனைத்து வயது பெண்களையும், அனுமதிப்பது என்று முடிவு செய்துள்ளோம். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இதனால் மீண்டும் சபரிமலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டு உள்ளது.

tamil.oneindia.com

TAGS: