வேதாரண்யத்தைப் புரட்டிப் போட்டது கஜா புயல்.. பேய்க்காற்று, பலத்த மழையால் ஸ்தம்பிப்பு

நாகப்பட்டனம்: நாகப்பட்டனம் மாவட்டத்தில் கஜா புயல் கரையைக் கடந்து வரும் வேதாரண்யம் பகுதியை புயல் சூறையாடி விட்டது. பேய்க்காற்றுடன், பலத்த மழையால் வேதாரண்யமே பெரும் சேதத்தை சந்தித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

வேதாராண்யம் முழுவதும் கடும் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேய்க்காற்று அடித்து வருகிறது வேதாரண்யத்தில். அங்கு பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன. குடிசை வீடுகள் பல கூரை பிய்த்துக் கொண்டு போயுள்ளன. வாகனங்களைப் புரட்டிப் போடும் அளவுக்கு மிக மோசமான முறையில் காற்று வீசி வருகிறது.

பேய்க்காற்றுடன் பலத்த மழையும் சேர்ந்து கொண்டுள்ளதால் வேதாரண்யமே ஆடிப் போயுள்ளது. புயல் முழுமையாக கடந்து போன பிறகுதான் வேதாரண்யம் சந்தித்துள்ள சேத நிலவரம் தெரிய வரும்.

இதேபோல ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகையில் பலத்த சூறைக் காற்று, இடி மின்னலுடன் பேய் மழை பெய்து வருகிறது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும், காரைக்காலிலும் கன மழை பெய்து வருகிறது. அங்கும் பலத்த காற்று வீசுகிறது. இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. ராமேஸ்வரம், பாம்பன், பரங்கிப்பேட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட கிட்டத்தட்ட 7 மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

நாகை மாவட்டம் முழுவதும் புயலின் கோர தாண்டவம் தொடங்கியுள்ளதால் அங்கு பல இடங்களில் வேரோடு மரங்கள் பிய்த்து எறியப்பட்டுக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. புயல் முழுமையாக கரையைக் கடந்த பிறகே சேத விவரம் தெரிய வரும்.

tamil.oneindia.com

TAGS: