செய்யாத சாதனையை நிகழ்த்திய தமிழக அரசு.. ஓகி புயலில் கற்ற பாடம் உதவிய கதை!

சென்னை: கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் மிக முக்கியமான சாதனை ஒன்றை அரசு செய்துள்ளது.

இனி வரும் பேரிடர் காலங்களில் எல்லா அரசும் பின்பற்ற வேண்டிய செயலை அரசு செய்துள்ளது. இந்த புயல் காரணமாக இன்று வரை ஒரு மீனவர் கூட பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கஜா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. கஜா புயலுக்கு எதிராக தமிழக அரசு மிக துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பெரிய சாதனை

இந்த புயல் காரணமாக கடலில் எந்த மீனவரும் சிக்கவில்லை. இது பேரிடர் காலங்களில் நடக்காத பெரிய சாதனை ஆகும். 100 சதவிகித மீனவர்கள் கரை சேர்ந்துவிட்டதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். மீனவர்கள் தரப்பிலும் ஒரு மீனவர் கூட கடலில் மாட்டிக் கொண்டதாக புகார் அளிக்கப்படவில்லை. இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்களில், முதல்முறை இந்த புயலுக்குத்தான் இந்த நல்ல சம்பவம் நடந்து இருக்கிறது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டது

இந்த புயல் குறித்து ஒரு வாரம் முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீனவர்கள் கடலில் செல்ல தடையும் விதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் கடலோர காவல்படை களத்தில் இறங்கி மீனவர்களை கடலுக்கு செல்ல விடாமல் கண்காணித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மீட்டனர்

அதோடு புயலுக்கு ஒருநாள் முன் கடலுக்கு சென்ற மீனவர்களையும் கடலோர காவல்படை மீட்டது. 5 மீனவர்கள் ராமேஸ்வரம் கடல்பகுதியில் மீட்கப்பட்டனர். இவர்கள்தான் கடைசியாக அங்கு கடலுக்குள் செல்ல முயன்றவர்கள். மீனவர்களை கடலுக்கு அனுப்பாமல் அரசு தீவிரமாக கண்காணித்து.

ஓகி புயல்

ஓகி புயல் காரணமாக நிறைய மீனவர்கள் கடலில் காணாமல் போய் மறுநாள் பிணமாக கரை ஒதுங்கினார்கள். மத்திய அரசிடம் இவர்களின் விவரமும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் கூட சரியாக கணக்கில் இல்லை. அந்த மோசமான சம்பவத்தில் இருந்து பாடம் கற்ற தமிழக அரசு தற்போது கஜாவிற்காக களமிறங்கி, மீனவர்களை காப்பாற்றி உள்ளது.

tamil.oneindia.com

TAGS: