இந்தியாவில் புற்று நோய்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

மும்பை: இந்தியாவில் இருதய நோய்க்கு அடுத்தபடியாக புற்று நோயால் அதிகம் பேர் மரணம் அடைகின்றனர். இந்த நிலையில் இந்திய மருத்துவ கவுன்சிலின் தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், கடந்த 6 ஆண்டுகளில் நாட்டில் 15.7 சதவீதம் அளவுக்கு புற்று நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு நாடு முழுவதும் புற்றுநோய் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் 11.5 லட்சம் பேர் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டில் 10 லட்சம் பேருக்கு இந்த நோய் தாக்கியிருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளில் உதடு மற்றும் வாய் புற்று நோய் மிகப்பெரிய அளவில் தாக்கியுள்ளது. தற்போது அது 11.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்த படியாக நகர் புறங்களில் பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய் அதிகமாக உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரை தாக்கிய இந்த புற்று நோய் 2018-ம் ஆண்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை ஆட் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த புற்று நோய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் நோயை கண்டறியும் தொழில் நுட்ப வசதியின் வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக புற்று நோய் விரைவாக கண்டறியப்பட்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று இந்திய புற்று நோய் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் டைரக்டர் டாக்டர் ரவி மெக் ரோத்ரா தெரிவித்துள்ளார்.

-athirvu.in

TAGS: