பிள்ளைகளுக்கு கொடுக்கவும் பால் இல்லை.. முதியவர்களுக்கு மாத்திரை இல்லை.. தனித்தீவான வேதாரண்யம்

நாகப்பட்டினம்: கஜா புயல் நடத்திய கோரத் தாண்டவம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகரம் என்பது தனித்தீவாக மாறியுள்ளது.

உணவு, மருத்துவ வசதி இன்றி அந்த நகரில் உள்ள மக்கள் தவிக்கிறார்கள். அண்டை ஊர்களில் இருந்து வேதாரண்யம் செல்வதற்கு 6 மணி நேரம் தேவைப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது.

வேதாரண்யம் மக்களை மீட்பதற்காக கூடுதலாக தேசிய பாதுகாப்பு படையினரை பேரிடர் மீட்புப் படையினர், அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தனித்தீவு

கஜா புயல், பாம்பன் மற்றும் கடலூர் நடுவே வேதாரண்யத்தில் இன்று அதிகாலை கரையை கடந்தது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றின் காரணமாக வேதாரண்யத்தில், ஏறத்தாழ அனைத்து மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்து கிடக்கின்றன. மழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டு அந்த ஊர்களில் இருந்து வேதாரண்யம் செல்வதற்கே முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக அந்த நகரமே இப்போது தனித்தீவாக மாறியுள்ளது.

மின்சாரம், செல்போன் சேவை இல்லை

நேற்று இரவு முதல் எங்கும் மின் இணைப்பு கிடையாது. தொலைத் தொடர்பு வசதியும் அற்றுப்போய் கதறி துடிக்கிறார்கள் வேதாரண்யம் மக்கள். அங்கேயுள்ள தங்கள் உறவினர்கள் எப்படி உள்ளார்களோ என்று போன் செய்து கூட தெரிந்து கொள்ள முடியாத நிலையில் பிற ஊர்களில் உள்ள உறவினர்கள் உள்ளனர். வேதாரண்யத்திலுள்ள மீட்பு படையினர், போலீஸ் பயன்படுத்தும் வாக்கி டாக்கிகள் மூலம்தான், தங்களுக்குள் தகவல் பரிமாறி வருகிறார்கள். எனவே, நடமாடும் டெலிபோன் கோபுரங்களை வேதாரண்யத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை

50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி இதுகுறித்து கூறும்போது, “எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு கூட முடியாத சூழ்நிலையில் தவித்துப் போயுள்ளேன்” என்று கண்ணீர் வடித்தார். பள்ளி மாணவி ஒருவர் கூறும்போது “வெள்ளத்தால் எங்கள் வீடு இடிந்து விட்டது. இதனால் பாடப்புத்தகங்கள் சேதமடைந்துவிட்டன. இன்னும் பலருக்கும் கூட இதே போன்று சூழ்நிலை எழுந்துள்ளது. எங்களுக்கு மீண்டும் புத்தகம் தேவைப்படுகிறது. இதை எப்படி மீண்டும் பெறுவது..?” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

சாலை வசதி

வேதாரண்யம் நகரத்தில் உணவுக்கும் வழியின்றி மக்கள் தவித்து வருகிறார்கள். குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு கூட பால் இல்லாமல், பெற்றோர்கள் வேதாரண்யத்தின் வீதிகளில் சுற்றி திரிந்ததை பார்க்க முடிந்தது. பிற பகுதிகளில் இருந்து, பால் பொருட்களை வேதாரண்யத்திற்கு கொண்டு செல்ல முடியாததால் பால் கிடைக்காமல் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். நாகையில் பால் இருப்பு உள்ள போதிலும், அதை வேதாரண்யம் கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.

கூடுதல் படை தேவை

ஆயிரக்கணக்கான மரங்கள் வீழ்ந்துகிடப்பதன் காரணம் மிக அதிக அளவில் பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே இந்த மக்களை துயரத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்பதே அங்குள்ள சூழ்நிலையாக உள்ளது. கூடுதலாக ஜேசிபி இயந்திரங்களும் தேவைப்படுகிறது.

உதவிக்கரம் தேவை

சாலை மார்க்கமாக செல்ல முடியாவிட்டால், கடல்மார்க்கமாக சென்று மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் தன்னார்வ குழுக்களும் கூட தங்களது முழு கவனத்தையும் வேதாரண்யம் மீது வைத்து தனித்தீவாக சிக்கியுள்ள அந்த மக்களை காப்பாற்ற தங்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

tamil.oneindia.com

TAGS: