குடிநீர், உணவு, மின்சாரம் இல்லை.. டெல்டா மாவட்டங்களில் வலுக்கும் மக்கள் போராட்டம்

நாகை: கஜா புயல் கோரத்தாண்டவத்தால் ஆங்காங்கே குடிநீர், உணவு, மின்சாரம் இல்லாததால் டெல்டா மாவட்டங்களில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் 120 கி.மீ. தூரத்துக்கு காற்று வீசியது.

இதைத் தொடர்ந்து நாகை, வேதாரண்யம், திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாலைகளிலும் தெருக்களிலும் முறிந்து விழுந்தன.

50 ஆயிரத்துக்கும் மேல்

தென்னை, வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பயிர்களும் சேதமாகின. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்ததால் டெல்டா மாவட்டங்களில் கிராம பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளன.

தஞ்சம்

நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் சுமார் 90 ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது குடிநீர், உணவு, மின்சாரம் எதுவுமே கிடைக்காததால் கிராம மக்கள் அதிகளவில் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

போராட்டம்

தற்போது இவர்களுக்கு நாகை, வேதாரண்யம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், விழுந்தமாவடி, திருவோணம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திணறல்

தனி தீவுபோல் காட்சியளிக்கும் வேதாரண்யத்தில் இன்று வரை எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் குடிநீர், அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.

தாக்குதல்

நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே சில கிராமங்களில் அதிகாரியை முற்றுகையிடுவதும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் நிகழ்கிறது.

tamil.oneindia.com

TAGS: