கனவை சிதைத்த கஜ புயல்: பேசப்படாத சோகமும், ஒரு தலைமுறையின் நம்பிக்கையும்

நண்பன் விஜய் சிங்கப்பூரிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு அழைத்தான். புதுக்கோட்டைக்காரன். கடும் உழைப்பாளி. விவசாயி. கல்லூரி படிக்கும் போதே விவசாய பணிகளை முடித்துவிட்டுதான் கல்லூரி வருவான்.

2008 கல்லூரி முடித்து நாங்கள் எல்லாம் எதார்த்தத்துடன் ஒன்ற மறுத்து கனவுகளை சுமந்து திரிந்துக் கொண்டிருந்த போது, குடும்பத்தை சுமக்க சிங்கப்பூர் ஓடியவன். ஏன் வெளிநாடு பயணம்? என்ற கேள்விக்கு, அவனிடம் காத்திரமான பதில்கள் இருந்தன.

ஆற்றுப்பாசனம் இல்லாமல், கிணறையும், மழையையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்த அவனால் அதற்கு மேல் விவசாயத்தில் ஈடுகொடுக்க முடியவில்லை.

நிலம் மீதான கனவு

அந்த சமயத்தில் விஜய் சொன்ன பதில் இன்னும் நினைவிருக்கிறது, “விவசாயம் லாபகரமான தொழில்தான். அதில் லாபம் வேண்டுமென்றால், நவீனமாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடு தேவை. விவசாய முதலீட்டிற்கு யார் பணம் தருவார்கள். இருக்கும் கடனுடன் இதில் சிக்க விரும்பவில்லை. பணம் சேர்த்துவிட்டு மீண்டும் நிலத்திற்கே வருவேன்” என்பான்.

கஜ புயல்

அதன்பின் எப்போதாவது பேசுவோம். பேசும் போதெல்லாம் எல்லாம் கூடி வந்தால் மீண்டும் நிலத்திற்கே வந்துவிடுவேன் என்பான். இரண்டு தினங்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து அழைத்தவன், குரல் உடைந்து பேசினான்.

“கட்டி வைத்த சிறு கூட்டை கஜ புயல் சிதறடித்துவிட்டது. வாழை, தென்னை எல்லாம் சரிந்துவிட்டது. அதனுடன் சேர்த்து நம்பிக்கையும். இதிலிருந்து மீள இன்னும் எத்தனை ஆண்டுகள் சிங்கப்பூரில் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை” என்றான்.

இது யாரோ ஒரு விஜயகுமாரின் குரல் இல்லை. இதுதான் டெல்டா மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களிலிருந்து வாழ்வாதாரத்திற்காக வெளிநாடு சென்றவர்களின் குரல்.

குடிபெயர்தல்

வேலைவாய்ப்பிற்காக குடிபெயர்தல் அதிகளவில் டெல்டா மாவட்டங்களில்தான் நடக்கிறது என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சாமி நடராஜன்.

“டெல்டா மாவட்டங்களில் பெரிதாக ஏதும் தொழிற்சாலை இல்லை. அதனால், திருப்பூர் தொடங்கி அரபு நாடுகள் வரை வாழ்வாதாரத்திற்காக இந்த பகுதி மக்கள் செல்கிறார்கள். அவர்கள் அங்கு லட்சம் லட்சமாகவெல்லாம் பணமீட்டவில்லை. குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய உழைக்கிறார்கள். கூரை வீடாக இருந்ததை ஓட்டு வீடாக மாற்றி இருக்கிறார்கள். கடனை அடைத்து இருக்கிறார்கள். இப்போது இந்த கஜ புயல் அவர்களின ஒரு தலைமுறை உழைப்பை நிர்மூலமாக்கிவிட்டது” என்கிறார் அவர்.

கஜ புயல்

மேலும், “மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளானது தென்னை விவசாயம். மீண்டும் ஒரு மரம் வைத்து காய்ப்புக்கு வர ஐந்து ஆண்டு ஆகும். கஜ புயல் துயரங்கள் வெளியிலிருந்து பார்ப்பதற்கு சாதாரணமாக தெரியலாம். ஆனால், இந்த காயத்தின் வலி அதிகம். அதன் வடுவினை காலம் முழுவதும் சுமந்திருக்க வேண்டும்” என்று டெல்டாவின் நிலையை பகிர்கிறார் சாமி நடராஜன்.

கஜ புயலால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு தலா ரூ.3 ஆயிரமும் இழப்பீடு தொகையாக உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.

எதிர்கட்சிகளும் அதிக இழப்பீடு தொகையை கோரி உள்ளன.

கஜ புயல் சேதத்தில் எல்லாரும் பொருளாதார கணக்குகளை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது முக்கியம்தான். ஆனால், அதனை கடந்து குடும்பம் என்ற அமைப்பில் அது ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் இதுதான்.

கடனை அடைத்தாகிவிட்டது, சிறிதான சேமிப்பும் உள்ளது. மீண்டும் நாடு திரும்பலாம் என்று நம்பிய பலரின் கனவினை இது கலைத்துவிட்டது. வெளிநாட்டில் உள்ள ஒருவர் மீண்டும் குடும்பத்துடன் இணைவது தாமதப்படலாம்.

ஒரு வீடு, சில ஆடு, எளிய வாழ்வு

ஒரு வீடு, அதை சுற்றி தங்களுக்கு தேவையான காய்கறிகள், வாழ்வாதாரத்திற்காக சில ஆடுகள் வளர்ப்பார்கள். டெல்டா பகுதியில் உள்ளடங்கி இருக்கும் கிராமங்களில் வாழ்நிலை இப்படித்தான் இருக்கும். டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் இது எனக்கு நன்கு தெரியும்.

கோரத்தாண்டவமாடிய கஜ புயல்

இந்த எளிய வாழ்வையும் இல்லாமல் செய்துவிட்டது கஜ புயல்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த வேம்பையன், “தேக்கு மரத்தை நம்பி எதிர்காலம் குறித்த பலதிட்டங்களை வைத்திருப்பார்கள். தேக்கு மரத்தை விற்று திருமண செலவை செய்யலாம், படிப்பிற்கு கட்டணம் செலுத்தலாம் என பல திட்டங்கள் இருக்கும். கேட்பதற்கு இது வேடிக்கையாக தெரியலாம். ஆனால், இந்தப் பகுதியின் நிதர்சனம் இதுதான். இதில் பெரும் தாக்கம் செலுத்தி இருக்கிறது இந்தப் புயல்” என்கிறார்.

சென்னை பெருமழையின் போது, கேரள வெள்ளத்தின் போது பெரும் எண்ணிகையிலான இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மூலம் திரண்டார்கள். ஆனால், அதுபோல ஒரு காட்சி இப்போது அரங்கேறவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில முன்னெடுப்புகள் நடந்தாலும், திரட்சியான பங்களிப்பு இல்லாமல் இருப்பது போலவே தோன்றுகிறது.

கஜ புயல்

இதற்கு காரணம் சமூகம் இந்த புயலினால் ஏற்பட்ட பாதிப்பை சரியாக புரிந்து கொள்ளாதது என்கிறார் வேம்பையன்.

“உயிர் சேதம் குறைவாக உங்களுக்கு தெரியலாம். ஆனால், எதிர்காலத்தை சூனியமாக்கி சென்று விட்டது இந்தப் புயல். இதுவரை சேமித்த அனைத்தையும் தொலைத்து பூஜ்ஜியத்தில் வாழ்க்கை நிற்கிறது” என்று தெரிவிக்கிறார் அவர். -BBC_Tamil

TAGS: