போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை

லக்னோ:”பணியில் ஒழுங்காக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் பாடம் கற்றுத் தரப்படும்,” என, போலீஸ் அதிகாரிகளுக்கு, உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. சமீப காலங்களில், குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை அடுத்து, போலீஸ் அதிகாரிகளுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:போலீஸ் அதிகாரிகள் ஒழுங்காக தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். இல்லாவிட்டால், சரியான பாடம் கற்றுத் தரப்படும். பணியில் விழிப்புடன் இருக்க வேண்டும். குற்றவாளிகள் தான், உங்களை பார்த்து பயப்பட வேண்டும்.குற்றங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதுவரை பதிவான வழக்குகளில், விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். ரோந்துப் பணியில் போலீசார் ஈடுபடுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தின்போது, போக்குவரத்து கூடுதல் டைரக்டர் ஜெனரல், எம்.கே. பஷாலை பணியிட மாற்றம் செய்து, ஆதித்யநாத் உத்தரவிட்டார். மாமூல் வசூலித்ததாக, மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு, கட்டாய ஓய்வு கொடுக்கவும், அவர் உத்தரவிட்டார்.

-dinamalar.com

TAGS: