சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யாத நிலையில், 3 கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்துக்கொலை செய்த அதிமுகவை சேர்ந்த தண்டனை குற்றவாளிகளை அவசரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருமே 25 வருடங்களை சிறையில் கழித்தவர்கள். சுமார், இரட்டை ஆயுள் தண்டனை காலத்தை சிறையில் கழித்துள்ளனர். ஆனால், அவர்கள் விடுதலை என்பது தொடர்ந்து காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
கொடூர சம்பவம்
2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கோவையை சேர்ந்த, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் சுற்றுலா சென்ற பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதில், கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த, நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பீதியில் மக்கள்
டான்சி ஊழல் வழக்கில், தங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா, தண்டனை பெற்று, சிறை சென்றதற்காக, 3 மாணவிகளை உயிரோடு எரித்து அதிமுகவை சேர்ந்தவர்கள் கொலை செய்த சம்பவம் அப்போது பெரும் அச்சத்தையும், பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
மக்கள் நம்பிக்கை
உயிரோடு எரித்து கொலை செய்த மூவருக்கும், நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தபோதுதான், மக்கள் மத்தியில் இருந்த பீதி ஓரளவுக்கு குறைந்தது. இது போன்ற தண்டனைகள் வருங்காலங்களில் இப்படியான பஸ் எரிப்பு மற்றும் கொலை சம்பவங்களுக்கு பாடமாக இருக்கும், இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று மக்கள் நம்பினர்.
விடாமல் முயற்சி
ஆனால் அந்த நம்பிக்கையின் மீது பெரும் இடி இறங்கியுள்ளது. இந்த மூவருமே உள்நோக்கத்தோடு குற்ற செயலில் ஈடுபடவில்லை என்று கூறி அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தற்போதைய தமிழக அரசு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு பரிந்துரை அளித்திருந்தது. இந்த பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுனர் அதை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பினார். ஆனால், அப்படியும் விடாத தமிழக அரசு, மீண்டும் வலியுறுத்தி ஆளுநருக்கு அறிக்கை அனுப்பியது.
கிடப்பில் போட்டனர்
அரசு இரண்டாவது முறையாக பரிந்துரை செய்த பிறகு மரபுப்படி ஆளுநர், அரசின் பரிந்துரையை ஏற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனால் மூவரையும் விடுதலை செய்யும் முடிவை எடுத்துள்ளார் ஆளுநர். ஆனால் தமிழக அரசு மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருவருமே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றவில்லை.
7 பேர் விடுதலை
அமைச்சரவையை கூட்டி பரிந்துரை செய்து 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதோடு சரி. அதன் பிறகு இந்த மூன்று பேர் விடுதலை தொடர்பாக எடுக்கப்பட்ட அக்கறையை அதில் அரசு காட்டவில்லை. இந்த மூவருமே, உயிரோடு கல்லூரி மாணவிகளை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் என்பது பல்வேறு ஆதாரங்களை கொண்டு நிரூபிக்கப்பட்டது. மாணவிகளின் பஸ் எரிப்பு காட்சிகள், வீடியோக்களாக பதிவாகி அப்போது டிவி சேனல்களில் பரபரப்பாக ஒளிபரப்பாகியது. ஆனால் ஏழு தமிழர்களை பொறுத்த அளவில், எதற்கு என்று தெரியாமல், பேட்டரி வாங்கிக் கொடுத்தது மட்டுமே அவர்கள் மீதான குற்றச்சாட்டாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தில் நேரடி தொடர்பில்லை என்ற பிறகும் கூட இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்தாலும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.