தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிதாக உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
கஜ புயல் தமிழக பகுதியை கடந்த பிறகு, புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவானது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கிவந்து, நிலை கொண்டுள்ளது.
இந்த தாழ்வுப் பகுதி மேலும் தமிழக, புதுச்சேரி கடலோரப் பகுதியை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகரக்கூடும் என்பதால், தமிழக கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ‘கஜ புயல் நான்கு தலைமுறையாக சேர்த்த சொத்துகளை அழித்துவிட்டது’
- கோரத்தாண்டவமாடிய கஜ புயல் – கைக்குழந்தைகளுடன் பரிதவிக்கும் பெண்கள்
சில இடங்களில் கன மழையோ, மிக கன மழையோ பெய்யும் வாய்ப்புள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக செங்கோட்டையில் 8 செ.மீ. மழையும் மணிமுத்தாற்றில் 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
கஜ புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், புதுக்கோட்டை பகுதிகளில் இன்று விட்டுவிட்டு மழை பெய்தது.
நாளை பிற்பகல் வரை மன்னார் வளைகுடா பகுதிக்கும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -BBC_Tamil