நாகை மாவட்டத்தில் கஜ புயலால் மா, பலா, வாழை, தென்னை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவிற்கு உட்பட்ட ஆதியங்காடு, கோவிந்தங்காடு, செட்டிய்யாங்காடு, அரைகால்கரை உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக விளைந்திருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் காற்றில் சிக்கி அடியோடு சாய்தன. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, வேதனையில் ஆழ்ந்தனர். வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ளதாக விவசாயிகள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆதியங்காடு பகுதியை சேர்ந்தவர் கலைமணி இவருக்கு வயது 60. கடந்த 40 ஆண்டுகளாக தென்னை விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 3 ஏக்கரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. கடந்த 15ம் தேதி ஏற்பட்ட கஜ புயல் காரணமாக அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 600க்கும் மேற்பட்ட மரங்கள் முற்றிலும் சாய்ந்தன.
இதனால் பெருத்த நஷ்டத்திற்கு ஆளான கலைமணி பிபிசி தமிழிடம் பேசியபோது, “எனக்கு அறுபது வயது ஆகிறது. எனக்கு விவரம் தெரிந்து இது மாதிரியான புயலை நான் பார்த்ததில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எங்களுக்கு எதுவுமே தெரியாது. திடீரென அடித்த புயல் காரணமாக எனக்கு சொந்தமான தென்னைமரங்கள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த தென்னை மரங்கள் எல்லாமே நாற்பது ஐம்பது வருஷம் பழமையானது. இப்போதெல்லாம் முற்றிலும் அழிந்து போயிருக்கு” என்றார்.
இது மாதிரியான மரங்கள் காய்க்கும் நிலைக்கு வருவதற்கு எப்படியும் ஒரு தலைமுறையாவது ஆகும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் வீட்டுக்கு குழம்பு வைக்க கூட ஒரு தேங்காய் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து நாங்கள் மீண்டு வருவதற்கு மூணு ஆண்டுகள் ஆகும். முதல்ல சாய்ந்த மரங்களை அப்புறபடுத்தனும், பின் சுத்தம் பண்ணனும், மறுபடி இந்த தோட்டத்தில் தயார் செய்ய குறைந்தது நான்கு வருடங்கள் ஆகும்” என தெரிவித்தார். -BBC_Tamil