மதம் பரப்ப சென்றவர் அந்தமானில் படுகொலை

போர்ட்பிளேர்: அந்தமான் தீவுகளில் உள்ள சென்டினல் பழங்குடியின மக்களிடம் கிறிஸ்துவ மதத்தை பரப்ப சென்ற அமெரிக்கர், அந்த மக்களால் கொலை செய்யப்பட்டார்.

அரிய பழங்குடிகள்

அந்தமான் நிகோபார் தீவுகளில் உலகளவில் மிக அரிய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான இம்மக்கள், ஜாரவா, ஒன்கே, சென்டினல் என ஐந்து பிரிவு மக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் வெளி உலகிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. வேட்டையாடி தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை யாரும் தொந்தரவு செய்ய கூடாது என மத்திய அரசு சட்டமே இயற்றி உள்ளது.

வில், அம்பே ஆயுதம்

இதில், சென்டினல் இன மக்கள் மிகவும் உணர்வுபூர்வமானவர்கள். தங்கள் பகுதிக்கு வெளியாட்கள் யாரும் வர கூடாது என்பதில் தீவிரமாக இருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் இவர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் வில், அம்பை தான் தங்களின் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்தவர் ஜான் ஆலன் சாவ். இவர் சில நாட்களுக்கு முன் அந்தமான் சென்று உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் படகு மூலம் வடக்கு சென்டினல் தீவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள பழங்குடியின மக்களிடம் கிறிஸ்துவ மத சிறப்புகளை கூற முயன்றுள்ளார். அவரை அழைத்து சென்ற மீனவர்கள் மிகவும் பயத்துடன் தொலை துரத்தில் நின்றிருக்க, சென்டினல் இன மக்கள் சாவ் மீது அம்புகளை ஏவியுள்ளனர். அவர் தன் உடலில் அம்பு பாய்ந்த நிலையிலும் தொடர்ந்து நடந்து சென்றுள்ளார். ஒரு கடத்தில் அவரை கயிற்றால் கட்டி, தரையில் இழுத்து சென்றுள்ளனர். இதை பார்த்த மீனவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அடுத்த நாள் வந்து பார்த்த போது, சாவ் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

மதத்தை பரப்ப தீவிர முயற்சி

அந்தமான் போலீசார் அடையாளம் தெரியாத சிலர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த சாவ் இதற்கு முன், ஐந்து முறை அந்தமான் தீவுகளுக்கு வந்துள்ளார். கிறிஸ்துவ மதத்தை பரப்ப அவர் வடக்கு சென்டினல் தீவுக்கு செல்வதில் மிகவும் தீவிரமாக இருந்தார் என உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

-dinamalar.com

TAGS: