கர்தார்புர் குருத்வாராவிற்கு சாலை: பாக்.,கிற்கு இந்தியா கோரிக்கை

புதுடில்லி: பாகிஸ்தானின் கர்தார்புரில் உள்ள குருத்வாராவிற்கு சீக்கியர்கள் செல்வதற்கு வசதியாக பஞ்சாபிலிருந்து சர்வதேச எல்லை வரை நவீன சாலை அமைக்க ஒப்புதல் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோல் பாகிஸ்தானிலும் சாலை அமைக்க வேண்டும் என அந்நாட்டு அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

550வது பிறந்தநாள்

சீக்கியர்களின் பத்து குருமார்களில் முதன்மையானவரான குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவால் மாவட்டத்தில் உள்ள கர்தார்புர் குருதுவாராவில் சமாதி அடைந்ததாக கருதப்படுவதால் சீக்கியர்களுக்கு அது புனிதத் தலமாக விளங்குகிறது. அடுத்த ஆண்டு குரு நானக்கின் 550வது பிறந்த நாள் வருகிறது. இதற்காக ஏராளமான சீக்கியர்கள் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

நவீன சாலை

இந்நிலையில், கர்தார்புர் செல்வதற்கு வசதியாக, பஞ்சாபின் குருதாஸ்புர் மாவட்டத்தின் தேரா பாபா நானக் என்ற நகரில் இருந்து சர்வதேச எல்லை வரை நவீன சாலை அமைக்க, பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில், அனைத்து நவீன வசதிகளும் இடம்பெற்றிருக்கும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

உணர்வுகளை மதிங்க

இதனிடையே, கர்தார்புர் குருத்வாராவிற்கு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என பாகிஸ்தானிற்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது: சீக்கிய சமுதாயத்தினரின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்தியாவிலிருந்து கர்தார்புர் குருத்வாரா வரும் யாத்ரீகர்களின் வசதிக்காக, பாகிஸ்தான் அரசு, அங்கு செல்ல நவீன சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-dinamalar.com

TAGS: