அதிகரித்துவரும் பேரிடர்கள்; என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?

இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து தமிழ்நாடு தொடர்ச்சியாக சுனாமி, வெள்ளம், புயல், வறட்சி எனப் பேரிடர்களைச் சந்தித்துவருகிறது. இனி பேரிடர்களை எதிர்கொள்வதிலும் தவிர்ப்பதிலும் மாநில அரசின் பார்வை மாற வேண்டும் என்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள். அந்தத் திசையில் செயல்பட ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறது மாநில அரசு.

தமிழ்நாட்டின் உள்ள கடற்கரையின் நீளம் 1,076 கி.மீ. இது இந்தியாவில் உள்ள கடற்கரைகளில் பதினைந்து சதவீதம். 2004ல் தமிழக கடலோரப் பகுதிகளைத் தாக்கிய சுனாமி ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, பெரும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியது.

2000வது ஆண்டு புயல், 2005ல் ஃபானூஸ் புயல், 2008ல் நிஷா புயல், 2010ல் ஜல் புயல், 2011ல் தானே, 2012ல் நிலம் புயல், 2016ல் வர்தா, 2017ல் ஒக்கி, 2018ல் கஜ என இந்த நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இப்போது வரை 9 புயல்கள் தமிழகத்தைத் தாக்கியிருக்கின்றன.

இது தவிர, 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் சுமார் 650 உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பொருள் இழப்பையும் ஏற்படுத்தியது. ஒவ்வொரு புயலின் போதும் மாநிலத்தின் எட்டு சதவீத மக்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

புயல்

இவற்றைத் தவிர, தமிழகத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்பட்டு வரும் வறட்சி, விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கிறது. மாநிலத்தில் மதுரை, ராமநாதபுரம், தர்மபுரி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் எப்போதுமே எளிதில் வறட்சிக்கு இலக்காகக்கூடிய மாவட்டங்களாக இருக்கின்றன.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் பெரும்பாலானவை கடலரிப்பால் பாதிப்பிற்குள்ளான நிலையிலேயே இருக்கின்றன.

இவை தவிர, கடல்நீர் உட்புகுவது, வெப்ப அலை, காட்டுத் தீ, நிலச்சரிவு, நிலநடுக்கம் ஆகியவையும் மாநிலம் எதிர்கொள்ளும் பேரிடர்களாக இருக்கின்றன.

கடந்த நூற்றாண்டிலிருந்து இப்போதுவரை புயல்களை சந்தித்தவகையில் ஒடிஷா, ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு.

“ஒவ்வொரு முறையும் புயல் வருவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். பிறகு புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்ற பிறகு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறது மாநில அரசு. தமிழகத்தைத் தாக்கும் புயல்கள், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பேரிடர்களுக்கென மாநில அரசு ஒரு முழுமையான கொள்கைத்திட்டத்தை வடிவமைத்து, செயல்பட வேண்டும்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன்.

புயல்

இப்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழகத்தை புயல் தாக்கிவருகிறது, இது ஆண்டிற்கு ஒருமுறை என மாறும், பிறகு ஆண்டிற்கு இரண்டு என்று வரும், அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் அனைத்து வளங்களும் பேரிடர் தொடர்பான நடவடிக்கைகளுக்குத்தான் பயன்படும். வேறு எந்த மக்கள் நல திட்டங்களும் செய்யமுடியாது என்கிறார் அவர்.

இந்தத் திசையில் முதலில் விழித்துக் கொண்ட மாநிலம் ஒதிஷாதான். 1999ல் ஏற்பட்ட மாபெரும் புயலை அடுத்து ஒரிசா மாநில பேரிடர் குறைப்பு ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது. பிறகு ஒரிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமாக மாற்றப்பட்டது.

இதற்குப் பிறகு, வந்த பேரிடர்கள் அனைத்தும் இந்த ஆணையத்தால் கையாளப்பட்டன. ஒவ்வொரு புதிய பேரிடரின்போதும் இந்த ஆணையம், அந்த அனுபவத்தைக் கொண்டு தன்னை தொடர்ந்து புதுப்பித்துவருகிறது. குறிப்பாக 2013ஆம் ஆண்டில் ஃபாலின் புயல் ஒரிசாவைத் தாக்கியபோது சுமார் 11,54,000 பேரை பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் இருந்து வெளியேற்றியது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.

புயல்

அந்தப் புயலின்போது ஒரிசா பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்பட்ட விதம் பெரும் பாராட்டுக்கு உள்ளானது.

ஒரிசாவுக்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலம்தான் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது. 2001 ஜனவரி 26ஆம் தேதியன்று குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்தே அதே ஆண்டில் பேரிடர் மேலாண்மைக்கென இந்த ஆணையத்தை உருவாக்கியது குஜராத். இப்போது தாலுகா மட்டம்வரை தனது கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கிறது குஜராத் மாநில பேரிடர் ஆணையம்.

இந்த இரு ஆணையங்களின் கட்டமைப்பின் அடிப்படையில்தான் தேசிய அளவில் பேரிடர் மேலாண்மைக்கென 2005 டிசம்பரில் சட்டம் இயற்றப்பட்டு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் அமைக்கப்பட ஆரம்பித்தன. இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பேரிடர் மேலாண்மை ஆணையம் 2003ல் துவக்கப்பட்டுவிட்டது.

மழை

“எல்லா மாவட்டங்களின் பெரிய பிரச்சனைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே பாதிக்கப்படக்கூடிய எல்லா இடங்களையும் அடையாளம் கண்டிருக்கும் வெகுசில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அவற்றை எதிர்கொள்வதற்கான இலக்குகளும் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக அந்த இலக்கை நோக்கி செயல்படும்போது பேரிடருக்கான ஆபத்து குறையும். புயல், வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு, வெப்ப அலை போன்றவற்றால் பாதிப்பு ஏற்படக்கூடிய 4399 இடங்களை அடையாளம் கண்டிருக்கிறோம்” என்கிறார் தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையர் கே. சத்யகோபால்.

பேரிடர்களை எதிர்கொள்வதில் தமிழகம் சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்கிறார் அவர். ஒவ்வொரு பேரிடரின்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தற்காலிகத் தீர்வு, நிரந்தரத் தீர்வு ஆகியவை மிகத் துல்லியமாக பின்பற்றப்படுகின்றன என்கிறார் அவர்.

மாநிலம் எதிர்கொள்ளும் பாதிப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு இப்போது மிக அதிக பாதிப்பை எதிர்கொள்ளக்கூடிய பகுதியில் துவங்கி, மிகக் குறைவான பாதிப்பை எதிர்கொள்ளும் பகுதி வரையில் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும் அவையனைத்தும் தமிழக வரைபடத்தில் குறிக்கப்பட்டு, அங்கு ஏன் பேரிடர் ஏற்படுகிறது, அவற்றைக் குறைக்க, எதிர்கொள்ள என்ன செய்யலாம் என்பது வரையில் திட்டம் தீட்டப்பட்டுவிட்டது என்கிறார் சத்யகோபால்.

மழை

இருந்தபோதும் ஒவ்வொரு பேரிடரின் போதும் மக்கள் பெரும் இழப்புகளை சந்திப்பது ஏன் என்று கேட்டபோது, “இவற்றையெல்லாம் முழுமையாக செயல்படுத்தி முடிக்க நீண்டகாலம் பிடிக்கும். தற்போதைய சூழலில் உயிரிழப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. அது மிக முக்கியமானது” என்கிறார் சத்யகோபால்.

“தமிழகத்தைத் தாக்கிய சுனாமிக்குப் பிறகு, நம் சிந்தனையே மாறியது. அதற்குப் பிறகு கடற்கரையோரத்தில் அரசு கட்டிக் கொடுத்த வீடுகள், புயல், சுனாமி, அதீத காற்று, வெள்ளம் ஆகியவற்றை எதிர்கொள்ளக் கூடியது. அந்த வீடுகளில் எல்லாம் வீட்டின் கூரைக்குச் செல்ல படிகள் இருக்கும். நாம் கணிக்க முடிந்ததைவிட அதிக வெள்ளம் ஏற்பட்டு, வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியேறவும் முடியாமல் போனால், வீட்டின் கூரையில் ஏறித் தப்பிவிடலாம். எந்த ஒரு மாநிலமும் இந்தத் திசையில் செயல்படுவதற்கு முன்பாக நாங்கள் இதைப் பற்றி சிந்தித்திருக்கிறோம்” என்கிறார் அவர்.

அதாவது ஒரு பேரிடர் நிகழ்வு நடந்தால், அதைச் சீரமைத்து புதிய கட்டமைப்பை உருவாக்கும்போது பலவகையான பேரிடரை எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்பை உருவாக்குகிறோம். இதில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம் என்கிறது மாநில அரசு.

புயல்

இந்த பேரிடர்களை எதிர்கொள்வதிலும் எதிர்காலத்திற்காக தயாராவதிலும் நிதி ரீதியாக சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள் மாநில அரசின் அதிகாரிகள். “தற்போது உள்ள தேசியப் பேரிடர் மேலாண்மை நிதி என்பது, அந்த நேரத்து இடரைக் களைய அளிக்கப்படும் உதவிதான். அவை, பேரிடரைத் தவிர்ப்பதற்கோ, இழப்பீடு வழங்குவதற்கோ போதுமானதல்ல. ஆனால், நமக்கு பேரிடரைத் தவிர்ப்பதற்காந நிதி தேவை. அப்போதுதான் படிப்படியாக பேரிடர்களை எதிர்கொள்ளக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்க முடியும்” என்கிறார் சத்யகோபால்.

2016க்குப் பிறகு தமிழ்நாடு இந்த திசையில் தீவிரமாக செயல்படத் துவங்கியுருக்கிறது. மாநில வருவாய்த் துறையின் பெயர் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் நிர்வாகத் துறை என பெயர் மாற்றப்பட்டது.

புயல்

கஜ புயலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டபோது அவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், அந்தப் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயலின் பாதிப்பு நீங்கினாலும், வீடுகளை இழந்த மக்களை உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. இத்தனை ஆண்டுகால பேரிடர் மேலாண்மைத் திட்டங்களுக்குப் பிறகும் இதுதான் நிலையா?

“இதற்கான தீர்வுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது மாநிலம் முழுவதும் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் பெரிய அளவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதுபோல முன்பு கட்டப்பட்டவை மிகச் சிறியவை. இப்போது ஒவ்வொரு மையத்திலும் 2,000 பேர் வரை தங்க முடியும்.” என்கிறார் சத்யகோபால்.

ஒதிஷா போன்ற மாநிலங்கள் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பல மடங்கு முன்னேறியுள்ளன. பேரிடர் காலங்களில், ஒதிஷாவின் நிலப்பரப்பில் தேவையான பகுதியை கணிணியில் தேர்வுசெய்து, ஒரே ஒரு க்ளிக்கில், அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கைச் செய்தியை அனுப்புகிறார்கள்.

மழை

பேரிடர் மேலாண்மை மையத்தில் அமர்ந்தபடி, ஒரேஒரு பொத்தானை இயக்கி, கடற்கரை முழுவதும் அபாயச் சங்கை ஒலிக்கச் செய்கிறார்கள்.

கஜ புயல் புதிய சவால்களை அடையாளம் காட்டியிருக்கிறது. அதையும் கருத்தில்கொண்டு செயல்படுவோம் என்கிறார் சத்யகோபால்.

-BBC_Tamil

TAGS: