இந்தியா – பாகிஸ்தான் இடையே சீக்கியர்களுக்கு ஒரு சிறப்பு சாலை – முக்கியத்துவம் என்ன?

பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஒன்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் சென்று வழிபட, இருநாட்டு எல்லையில் புதிய சாலை அமைக்கவும், நுழைவிடம் ஒன்றை அமைக்கவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் முடிவு செய்துள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின்போது, சீக்கியர்களில் பெரும்பான்மையினர் இந்தியாவில் உள்ள பஞ்சாபில் வசித்தனர்.

கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ளது. சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தனது கடைசி 18 ஆண்டுகளை இங்குதான் கழித்தார்.

அவரது 550வது பிறந்தநாளை முன்னிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசப்பிரிவினைக்கு பிறகு இரு இந்தியர்கள் அங்கு செல்ல கட்டுப்பாடுகள் இருந்ததாகவும், அங்கு வழிபட விரும்பிய இந்தியச் சீக்கியர்கள் விசா பெற கடுமையாகப் போராட வேண்டி இருந்ததாகவும் பிபிசி பஞ்சாபி செய்தியாளர் தலிப் குமார் கூறுகிறார்.

1947க்கு பிறகு மூன்று போர்களில் ஈடுபட்டுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உறவில் உண்டாகியுள்ள ஒரு முன்னேற்றமாகவே இது பார்க்கப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான்
கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா

தங்கள் எல்லைக்குள் அமையவிருக்கும் சாலைக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்ளவதாக இரு நாடுகளும் கூறியுள்ளன.

இந்த முடிவு அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு கிடைத்த வெற்றி என பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பவாத் சௌத்ரி கூறியுள்ளார்.

ஒரு சர்வதேச விமான நிலையத்தில் கிடைக்கும் வசதிகள் அளவுக்கு அங்கு வழிபடச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் என இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இந்த மாத இறுதியில் சாலை அமைக்கும் பணிகளை பாகிஸ்தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா எப்போது பணிகளைத் தொடங்கும் என்பதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. -BBC_Tamil

TAGS: