குழந்தைங்கள பத்தி யாருக்காவது இங்கே அக்கறை இருக்கா.. ரஜினி கடும் தாக்கு

சென்னை: “குழந்தைங்கள பத்தி யாருக்காவது அக்கறை இருக்கா? அவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த அக்கறையும் காட்டுவதே இல்லை” என்று ரஜினிகாந்த் கடுமையாக தாக்கி கூறியுள்ளார்.

குழந்தைகளின் அமைதிக்கான நிகழ்ச்சி ஒன்றினை லதா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்தார். இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

“குழந்தைகள்தான் இந்த பூமியில் பூத்துள்ள அழகான பூக்கள். ஆனால் அழகான அந்த பூக்களை நாம் அழவைத்து விடுகிறோம்.

மத்திய, மாநில அரசுகள்

அமெரிக்கா, லண்டன், ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்காக செலவிடும் பணம் ஆகட்டும், நேரம் ஆகட்டும், ஏன் அவர்களுக்கு செய்து தரும் புராஜக்ட் கூட ஆகட்டும், அதில் ஒரு பெர்சன்ட்கூட நம்முடைய மத்திய அரசோ, மாநில அரசோ செலவு செய்றது இல்லை.

என்ன பிரயோஜனம்?

குழந்தைங்க மீது எந்த அக்கறையும் காட்டுவதும் இல்லை. அவங்க வளர்ச்சி தானே முக்கியம்? அவங்க வளர்ச்சியில அக்கறை காட்டலேன்னா, இந்த நாடு எப்படி நல்லா இருக்கும்? அரசாங்கத்தை நம்பி பிரயோஜன இல்லை. குழந்தைங்க ரோட்டில பிச்சைதான் எடுக்கிறாங்க.

மாஃபியா கும்பல்

அவங்ககிட்ட போலீஸ்காரங்க யாராவது போய், ஏன் பிச்சை எடுக்கறீங்க? உங்களுக்கு பின்னாடி யார் இருக்காங்கன்னு கேட்டிருக்காங்களா? அப்படி கேட்டால், நிறைய விஷயங்கள் வெளியே வந்துவிடும். ஏன் என்றால், இந்த குழந்தைகளை வைத்து ஒரு பெரிய மாஃபியா கும்பலே இயங்குகிறது.

கவலை இருக்கிறதா?

அந்த கும்பலை பத்தி நாம் உட்பட அரசாங்கம் வரை யாருமே கண்டுக்கிறதும், கவலைப்படறதும் இல்லை. அந்த குழந்தைங்க அனாதையாகி, நோயாளியாகி, பிச்சை எடுத்து பிச்சை எடுத்தே வாழ்க்கை முழுசும் செத்து செத்து பிழைக்கிறார்கள்.

தண்டனை தர வேண்டும்

இது எவ்வளோ பெரிய குற்றம் தெரியுமா? கொலை செய்றதைவிட பெரிசு இது. குழந்தை கடத்தல் கும்பலை தடுக்க நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடுமையான தண்டனையும் தரவேண்டும்.” இவ்வாறு ரஜினி பேசினார்.

tamil.oneindia.com

TAGS: