தஞ்சாவூர்: தஞ்சையில் கஜா புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்து வரும் மத்திய குழுவிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
கஜா புயலால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கஜா புயல் பல லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. 10 மாவட்டத்தில் மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதையடுத்து மத்திய அரசின் ஆய்வு குழு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது. நேற்று புதுக்கோட்டையில் மத்திய குழு ஆய்வு செய்தது.
இந்த நிலையில் கஜா புயல் தொடர்பாக தொடர்ந்து மத்திய குழு இன்றும் ஆய்வு செய்து வருகிறது. இன்று தஞ்சாவூர், திருவாரூரில் மத்திய குழு ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது.
ஆனால் தஞ்சாவூரில் மத்திய குழுவிற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஒரத்தநாட்டில் மத்திய குழு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த குழு ஊருக்குள் வரக்கூடாது என்று மக்கள் போராடி வருகிறார்கள்.
மத்திய அரசும் மாநில அரசும் தங்களுக்கு நிவாரண நிதி வழங்கவில்லை.மக்களை அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் வந்து பார்க்கவில்லை என்று கூறி மக்கள் போராடி வருகிறார்கள்.
புயல் பாதித்து 9 நாட்கள் ஆகியும் இன்னும் டெல்டாவில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. பல இடங்களில் இன்னும் தண்ணீர் வரவில்லை, மின்சாரம் வரவில்லை. இதனால் மக்கள் அரசு நிர்வாகம் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.