கஜ புயல்: “விழுந்த மரங்களை மீண்டும் வளர்க்க முடியாது” – நம்பிக்கை இழக்கும் விவசாயிகள்

கஜ புயலின் தாக்கத்தில் தஞ்சை விவசாயிகள் இழந்தது, அவர்களின் தென்னை மரங்களை மட்டுமல்ல. அம்மாவட்டத்தில் தென்னை விவசாயிகள் மத்தியில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வட்டியில்லா கடன் முறை என்ற சமூக வழக்கத்தையும்தான்.

விவசாயம் அல்லது சொந்த தேவைக்காக உடனடியாக பணம் தேவைப்படும் நேரத்தில், அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு போகாமல், தென்னை விவசாயிகள் தேங்காய் விற்பனை முகவர்களிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு, 45 முதல் 60 நாட்களுக்கு பின்னர் தங்களது தேங்காய்களை விற்பனைக்கு அனுப்பும் முறை இருந்துள்ளது என பட்டுக்கோட்டை பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

நண்பர்களாக தெரிந்த தென்னை மரங்கள்

குறுகிய காலத்தில் தேங்காய்களுக்கு பணம் கிடைப்பதாலும், வட்டி இல்லாமல் முன்பணமாக தேவைக்கு பணம் கிடைக்கும் என்பதாலும், தென்னை மரத்தை விவசாயிகள் கற்பக விருட்சமாக பார்த்தனர் என்கிறார் பொன்னவராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 52 வயது இளமுருகன்.

தென்னை

”எனது சிறுவயதில் இருந்து வீட்டில் இருந்ததை விட தென்னை மர தோப்பில்தான் நான் இருந்திருக்கிறேன். தென்னை மர நிழல், இளநீர், தேங்காய் என தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் அனுதின வாழ்க்கைக்கான விஷயமாக இருந்தன. நான் பட்டப்படிப்பு முடித்தபிறகு, வேலை தேடுவதை விட, என் குடும்பத்திற்கு சொந்தமான ஐந்து ஏக்கர் தென்னைமர தோப்பை பராமரிக்கும் தொழிலில்தான் அதிக ஆர்வம் இருந்தது.

கடந்த 30 ஆண்டுகளாக முழுநேர தென்னை விவசாயியாக வேலை செய்துள்ளேன்.தற்போது ஏதுமற்றவனாய் நிற்கிறேன். என் தந்தை எனக்கு கொடுத்ததைப் போல, என் தோப்பில் உள்ள தென்னை மரங்களை என் மகளுக்கும், மகனுக்கும் விட்டுச் செல்வேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன்,” என உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பேசினார் விவசாயி இளமுருகன்.

தென்னை

தனது வாழ்க்கையில் முக்கியமான நேரங்களில் பண தேவைக்காக யோசிக்காமல், தென்னை மரவிளைச்சலை நம்பி கடன் பெற்ற அனுபவங்களை கூறும் அவர், ”தோப்பில் இருந்த தென்னை மரங்கள் எனக்கு நண்பர்கள் என்றே தோன்றும். சமீபத்தில் என் மகனின் படிப்பிற்காக மூன்று லட்சம் பணம் தேவைப்பட்டபோது, தேங்காய் முகவரிடம் வட்டி இல்லாமல் பணம் பெற்றுக்கொண்டேன். எனது ஐந்து ஏக்கர் தோப்பில் ஒவ்வொரு 45 நாளுக்கும் சுமார் 5000 தேங்காய்கள் கிடைக்கும். என் தோப்பில் உள்ள மரங்களில் தரமான காய்கள் இருக்கும் என்பதால், உடனடியாக பணம் கிடைத்தது. தற்போது என் தோப்பில் 80 சதவீத மரங்களும் இறந்துவிட்டன. என் உறவினர்களை, நண்பர்களை இழந்து நிற்கின்றேன்,” என்று வருத்தத்தோடு பேசினார் இளமுருகன்.

பட்டுக்கோட்டை பகுதியில் நாம் பயணித்த பல இடங்களில் உடைந்து, வேர்களை இழந்து இறந்துபோன தென்னை மரங்கள் குவிந்து கிடந்தன. தோப்புகள் பலவும், போர் நடந்த இடங்கள் போலவும், மரங்கள் இறந்தவர்களின் சடலங்கள் போலவும் தெரிந்தன. தென்னை மரங்களை அப்புறப்படுத்தக்கூட பணம் இல்லாமல் கைவிரிக்கிறார்கள் தென்னை விவசாயிகள். மரங்களை அகற்றுவதற்கு ஒரு மரத்திற்கு ரூ.500 என அரசாங்கம் அளிக்கும் உதவித்தொகை பயனளிக்காது என விவசாயிகள் கவலைதெரிவிக்கின்றனர்.

Presentational grey line
Presentational grey line

2019 தொடக்கத்தில் பொங்கல் திருவிழாவுக்கு தயாராகிக்கொண்டிருந்த விவசாயிகள் பலர், இனி தங்களது வாழ்வில் பொங்கல் திருவிழாவை ஒருபோதும் கொண்டாடமுடியாது என்ற கசப்பான எண்ணத்தோடு இருப்பதாக கூறுகிறார்கள்.

தென்னை

இந்தியாவில் பல மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் தேங்காய்களை அனுப்பிக்கொண்டிருந்த விவசாயிகள் தற்போது தீடீரென ஏழையாகிவிட்டனர் என்பதை பார்க்கமுடிந்தது. பட்டுக்கோட்டை பகுதியில் பலரும் தங்களது வீடுகளில் குறைந்தது ஐந்து தென்னை மரங்களை வைத்து வளர்த்துள்ளனர். பல இடங்களில், தெருக்கள் நேராக அமைந்திருந்தாலும், தென்னை மரங்களுக்கு ஏற்றவாறு வீடுகளின் அமைப்பு மாற்றப்பற்றிருப்பதை பாரக்முடிந்தது. புயலின் காரணமாக தென்னை மரங்களை இழந்த வீடுகள் தனியாக தெரிகின்றன.

100 ஆண்டுகளாக தென்னை பயிரிடும் குடும்பம்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அறியப்படும் தஞ்சை மண்ணில், தென்னை கன்றுகளை பிரதானமாக பயிரிட்டு வளர்ச்சி கண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என். ஆர்.ரங்கராஜன். மூன்று தலைமுறைகளாக தென்னை மர தோப்புகளை அமைத்து விவசாயம் செய்துவரும் குடும்பத்தில் ஒருவர் கஜ புயலின் தாக்கத்தை விளக்கும்போது, தென்னை விவசாயம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை புரிந்துகொள்ள முடிந்தது.

தென்னை விவசாயிகள்:

”எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 200 ஏக்கர் தென்னை தோப்புகள் முற்றிலும் நாசமாகியுள்ளன. என் தாத்தா ரங்கசாமி இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவந்த தென்னம்பிள்ளைகளை தம்பிக்கோட்டை பகுதியில் நட்டார். அவரை அடுத்து என் தந்தை ராமசாமி, அவரைத் தொடர்ந்து நான் என சுமார் 100 ஆண்டுகளாக எங்கள் தோப்பில் தென்னை விவசாயம் நடந்துவருகிறது. ஆனால் கஜ புயல் தாக்கத்தில் இருந்து நாங்கள் மீண்டுவர 20 ஆண்டுகள் ஆகும் என்று தோன்றுகிறது. தற்போதைய பாதிப்பால் மண்ணின் வளமும் கெட்டுப்போய் உள்ளது என்பதால், மீண்டும் பழைய விளைச்சலை மரங்கள் கொடுக்கும் என்ற நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. மற்ற பயிர்களை விட, தென்னை மரங்களை சிறிய அளவில் பயிரிட்ட பலரும் முதலாளிகளாக மாறியிருந்தனர். தற்போது பலர் ஒரே இரவில் ஏழைகளாகிவிட்டனர்,” என்கிறார் ரங்கராஜன்.

1960களில் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை காரணமாக பட்டுக்கோட்டை பகுதியில் நெல் பயிரிட்ட பலரும் தென்னை விவசாயத்திற்கு மாறியதாக கூறும் ரங்கராஜன், ”தென்னையை பொருத்தவரை முதல் ஐந்து ஆண்டுகள் பராமரித்தால், அடுத்த முப்பது ஆண்டுகள் வரை வருமானத்திற்கு குறைவு இல்லை என்பதை உணர்ந்த விவசாயிகள் பலர், காவிரி நீருக்காக ஒவ்வொரு ஆண்டும் காத்திருப்பதைவிட தென்னையை நட்டு வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்ற முடிவை எடுத்தனர். பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயம் அதிகரித்த பின்னர்தான், பொள்ளாச்சியில் தென்னை பெருமளவு பயிரிடப்பட்டது. ஆனால் பொள்ளாச்சி, கோவை மாவட்ட தென்னை, இளநீர் காய்களாக இருந்தன. பட்டுக்கோட்டை காய்கள் சதைபத்து கொண்ட சமையல் தேங்காய்களாக இருந்ததால், பட்டுக்கோட்டை தென்னை விவசாயிகளுக்கு நல்ல வருமானம் இருந்தது. பொருளாதார சிக்கல் குறைவாக இருந்தது,”என்று விவரிக்கிறார்.

தென்னையால் வளர்ந்த தொழில்கள்

தென்னை

தென்னை மரங்களின் வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை, தென்னையைச் சார்ந்த பல உபதொழில்களை செய்துவரும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தொழிலுக்கான மூலப்பொருளாக பயன்படுகிறது என விவசாயிகளிடம் இருந்து தெரிந்துகொண்டோம்.

தேங்காய்களை விவசாயிகள் விற்றுவிட, தேங்காயைச் சுற்றியுள்ள ஓட்டில் இருந்து எடுக்கப்படும் நார், கயிறாக திரிக்கப்படுகிறது, தென்னை மரக் கிளை சருகுகள் அடுப்பெரிக்கவும், பழுத்த தென்னை மரக் கிளைகள் குடிசைவீடுகளுக்கு கீத்து செய்யவும், பட்டுப்போன தென்னை மரத்தின் தண்டுகள் ஜன்னல் சட்டங்கள் செய்யவும் பயன்படுகின்றன என விவரிக்கிறார் தென்னை விவசாயி குமரன். அதேபோல தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களைக் 18 வகையான மதிப்பு கூட்டு பொருட்களையும் உருவாக்கலாம் என்கிறார் அவர்.

”ஒரு மரம் சுமார் 40 ஆண்டுகள் வரை வருமானம் தரும். தற்போது புயல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டை பார்த்தால், ஒரு மரத்திற்கு வெறும் ரூ.600 கொடுவுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. இந்த இழப்பீடு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை. குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு ஒரு மரத்தில் ஒரு விவசாயிக்கு சுமார் ரூ.2,000 கிடைக்கும். ஆனால் அரசு கொடுக்கும் இழப்பீடு என்பது எந்தவித ஆய்வும் நடத்தாமல் அறிவிக்கப்பட்டுள்ளதாக எண்ணுகிறோம். சென்னை-சேலம் இடையே எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டத்தில் ஒரு தென்னை மரத்திற்கு ரூ.50,000வரை தரப்படும் என்று கூறிய அரசு ஏன் தற்போது வெறும் ரூ.600 மட்டுமே தரமுடியும் என்று கூறுகிறது என்பதை விளக்கவேண்டும்,” என்கிறார்.

உடைந்த மரங்களை வளர்க்க முடியாது

தமிழக அரசின் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரான கார்த்திகேயன் மத்திய அரசு அதிகாரிகளுக்கு தென்னை விவசாயிகள் சந்தித்துள்ள இழப்புகளை எடுத்துரைத்துள்ளார்.

”தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை உடனடியாக சரிசெய்ய முடியாது. தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலின் வேகமான தாக்குதலால் பல மரங்களின் தண்டு பகுதிகள் முறிந்துள்ளதால், இந்த மரங்கள் சந்தித்துள்ள பாதிப்பின் தீவிரத்தை அறியலாம். பாதிப்பு காரணமாக தற்போது மண் வளமும் குறைந்திருக்க வாய்ப்புள்ளது. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளை போல உடைந்த மரங்களை மீண்டும் உயிர்கொடுத்து வளர்க்கமுடியாது. உடைந்த மரங்களின் தண்டுகளில் திசுக்கள் காய்ந்துபோவிட்டன. அரசின் இழப்பீடு குறைவாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது மத்திய அரசின் மதிப்பீடு நடக்கிறது,” என்கிறார் கார்த்திகேயன். -BBC_Tamil

TAGS: