கஜாவால் டெல்டாவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.. மத்தியக்குழுவை அதிர வைத்த கள நிலவரம்!

தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு செய்ய சென்ற மத்தியகுழு கூறியுள்ளது.

கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக முக்கியமாக டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள்.

கஜா புயல் சேதம் குறித்து தமிழகம் வந்திருக்கும் மத்திய ஆய்வுக்குழு ஆய்வு செய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட புயல் பாதித்த மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பு குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

இரண்டு நாள் ஆய்வு

கடந்த இரண்டு நாட்களாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. முதல் நாள் புதுக்கோட்டையில் ஆய்வு செய்தனர். நேற்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் பகுதிகளில் மத்தியக்குழு ஆய்வு செய்தது. ஆனால் உள்கிராமங்களில் மத்தியக்குழு ஆய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கடைசியாக நாகை மற்றும் காரைக்காலில் ஆய்வு செய்கிறார்கள்.

அதிர்ச்சி

இந்த புயல் பாதிப்பை பார்த்து மத்தியக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் தனது பேட்டியில், கஜாவால் டெல்டாவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கஜாவால் பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு பாதிப்பு இருக்கும் என்று நினைக்கவில்லை. பலரின் வாழ்வாதாரம் மோசமாகி உள்ளது.

நிவாரணம்

எப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும். பலர் எங்களிடம் நிவாரணம், உதவி குறித்து கேட்கிறார்கள். மாநில அரசின் முதற்கட்ட நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் அறிக்கைக்கு பின் அடுத்தகட்டமாக மத்திய அரசின் நிவாரணம் வழங்கப்படும், என்றுள்ளார்.

அறிக்கை எப்போது

இந்த நிலையில் மத்தியக்குழு நாளை புயல் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க உள்ளது. இன்று புயல் பாதிப்பு குறித்து தமிழக அமைச்சர்களுடன் விவாதம் நடத்தும். அதை தொடர்ந்து நாளை அறிக்கை அளிக்கப்பட்டு, நிவாரணம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

tamil.oneindia.com

TAGS: