சென்னை: முல்லைப் பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கு அனுமதி அளித்த கையோடு, அடுத்த சில மாதங்களிலேயே கர்நாடக அரசு மேகதாது பகுதியில், அணையை கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது மத்திய அரசு.
மத்திய அரசின் அடுத்தடுத்த இந்த அனுமதிகள் காரணமாக, நதிநீர் பங்கீட்டில், தமிழகம் பெரும் சிக்கலான சூழ்நிலையை சந்தித்து வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் 142 அடி உயரத்திற்கு தண்ணீரை சேமித்து வைக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
குடிநீர், விவசாயம்
முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக தண்ணீர் செல்கிறது. ஆனால் இவ்வாறு தமிழகம் பலன் பெறுவதை கேரள அரசியல் கட்சிகள் விரும்பவில்லை. தொடர்ச்சியாக பல்வேறு வதந்திகள் மூலமாக முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக காட்டியபடி உள்ளன.
வதந்திகள்
இதன் ஒரு பகுதியாக அணை பலவீனமாக இருப்பதாக சொல்லிவிட்டு புதிய அணை கட்டும் திட்டத்திற்கு கேரள அரசு காய் நகர்த்துகிறது. அந்த திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவதற்காக சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி கோரி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், கேரள அரசு விண்ணப்பித்திருந்தது.
சுற்றுச்சூழல் அனுமதி
கேரளாவின் கோரிக்கையை, ஏற்றுக் கொண்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், முல்லை பெரியாறில், புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம், இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இப்போது காவிரி ஆறு
இந்த நிலையில்தான் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஆய்வு செய்ய அனுமதி கேட்டிருந்தது. இந்த ஆய்வுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரங்களில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளும், தீர்ப்புகளும் தமிழக அரசுக்கு சாதகமாக உள்ளன. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது, மேகதாதுவில் புதிய அணை கட்டுவது உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படாத வாதங்கள். ஆனால் அதையும் மீறி முறையே கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் மத்திய அரசை அணுகியதும் மத்திய அரசு, அனுமதி வழங்கியதும் தமிழகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் லாபம்
கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ள கட்சியாக பாரதிய ஜனதா இருக்கிறது. தமிழகத்தில் அவர்களுக்கு வாக்குவங்கி கிடையாது. நோட்டாவுடன் தான் போட்டி போடுகின்றனர் பாஜக வேட்பாளர்கள். எனவே கர்நாடகாவிற்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும், மத்திய அரசு இது போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கருதப்படுகிறது.
மொத்த தமிழகத்திற்கும் ஆபத்து
முல்லை பெரியாறு மற்றும் காவிரி நீர் ஆதாரங்களில் அடுத்தடுத்து வழங்கப்படும் நெருக்கடி காரணமாக தமிழகத்தின் தென் மாநிலங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் கடும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். தமிழக அரசு உடனடியாக அரசியல் மற்றும் சட்ட வழிமுறைகளை பயன்படுத்தி முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது மட்டுமின்றி மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். செய்யுமா மாநில அரசு?