“ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம்” – ஆய்வு செய்த நிபுணர் குழு அறிக்கை

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட தருண் அகர்வால் குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி, அதற்கு எதிராக பொதுமக்கள் போராடிவந்த நிலையில், மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசால் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது செல்லாது என்று கூறி அந்த ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், நிர்வாகக் காரணங்களுக்கு மட்டும் ஆலைக்குள் செல்ல அனுமதி அளித்ததுடன், மாசு தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சதீஷ் சி.கார்கோட்டி மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் வரலட்சுமி ஆகியோர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.

ஸ்டெர்லைட்

இந்நிலையில், கடந்த 26-ம் தேதி தருண் அகர்வால் குழுவினர் தங்களது அறிக்கையை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்திருந்தனர். இன்றைய தினம் வழக்கு விசாரணையின் போது, பசுமைத் தீர்பாயத் தலைவர் கோயல் ஆய்வு குழுவினர் தாக்கல் செய்த அறிக்கை பிரித்து அதன் கடைசி பக்கத்தை படித்து காட்டினார்.

தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு நிலைக்கக்கூடியதல்ல என்றும், ஸ்டெர்லைட் ஆலையின் கருத்தை கேட்காமலேயே உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.

ஸ்டெர்லைட்

தமிழக அரசின் முடிவு இயற்கை நீதிக்கு முரணாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்த ஆய்வு குழுவினர், அந்த உத்தரவை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தனர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம் என்றும், ஆலையை சுற்றி வசிக்கும் மக்களின் பல்வேறு அச்சங்களை களைய ஆலை நிறுவனம் முயலவேண்டும் என்றும் தருண் அகர்வால் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.

தருண் அகர்வால் குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையின் நகல் தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் ஆகிய இருதரப்புக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்த பசுமைத் தீர்ப்பாய கோயல், அந்த அறிக்கையின் நகலைத் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்று இடை மனுதாரர்கள் விதித்த கோரிக்கையை மறுத்துவிட்டார்.

தமிழக அரசு ஒரு வார காலத்திற்கு பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கை டிசம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். -BBC_Tamil

TAGS: