பாக்., சேட்டை: அரசு விழாவில் காலிஸ்தான் தலைவர்

இஸ்லாமாபாத்: கர்தார்பூர் சிறப்பு பாதைக்கான பணிகளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். விழாவில், பஞ்சாபை தனி நாடாக்க வலியுறுத்தும் பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் தலைவரும் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடிக்கல் நாட்டு விழா

சீக்கிய மத ஸ்தாபகர், குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் சாஹிப், பாகிஸ்தானில் சர்வதேச எல்லையை ஒட்டி, ரவி நதிக்கரையில் அமைந்து உள்ளது. இந்த சமாதிக்கு செல்வதற்காக, பஞ்சாபின் குருதாஸ்பூரின் தேரா பாபா நானக் நகரில் இருந்து . கர்தார்பூர் வரை சிறப்பு பாதை அமைக்கப்பட உள்ளது.
பாக்., எல்லையிலிருந்து அமைக்கப்பட உள்ள பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா, நரோவல் நகரில் நடந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டு பாதை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார். பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா, மற்றும் அந்நாட்டு அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஸ்மிரத் கவுர், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்ச்சை

இந்த விழாவில், பஞ்சாபை தனி நாடாக ஆக்க வேண்டும் என போராடி வரும் காலிஸ்தான் அமைப்பின் கோபால் சாவ்லாவும் கலந்து கொண்டார். அவரை, பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா வரவேற்றார். கோபால் சாவ்லா பங்கேற்றது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சிரோன்மணி அகாலி தள கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

அமைதி

விழாவில் சித்து பேசியதாவது: கர்தார்ப்பூர் சிறப்பு பாதை இரு நாட்டு மக்களையும் இணைக்கும். இரு நாடுகளுக்கு இடையில் அமைதி நிலவ வேண்டும். ரத்தம் சிந்துவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மதத்தின் அடிப்படையில் பிரிவினை இருக்கக்கூடாது என இந்தியா கூறி வருகிறது. இதனை 550 ஆண்டுகளுக்கு முன்னர் குருநானக் கூறியுள்ளார். 70 ஆண்டுகளாக காத்திருப்பை பாகிஸ்தான் பிரதமர் நிறைவேற்றியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

ஹர்ஸ்மிரத் கவுர் பேசுகையில், இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். சீக்கிய யாத்ரீகர்களின் எதிர்பார்ப்பு நடந்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது தற்போதும் நடந்துள்ளது. இந்த சிறப்பு பாதை அமைக்க இரு நாட்டு அரசுகளும் ஒப்பு கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் கசப்புணர்வு மாறும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

சித்துவுக்கு பாராட்டு

தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், பல ஆண்டுகளாக சண்டையிட்ட ஜெர்மனியும், பிரான்சும் இணைந்து செயல்படும் போது, மற்ற நாடுகளால் ஏன் இதனை செய்ய முடியாது. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், பிரான்ஸ், ஜெர்மனியில் இறந்ததை விட குறைவு.
இரு நாடுகளுக்கு இடையிலான பொது பிரச்னை காஷ்மீர். மனித நேயத்துடன் இதனை தீர்க்க முடியாதா? இரு நாடுகளும் இணைந்து இந்த பிரச்னையை தீர்க்க முடியும். வறுமையை ஒழிக்க, இரண்டு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். எங்களை நோக்கி, இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், நாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்போம். இங்கு வந்துள்ள சித்துவை வரவேற்கிறேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் என்னை சந்தித்து விட்டு திரும்பிய பின்னர் பெரிய பிரச்னையை சந்தித்துள்ளார்.
நட்புறவுக்காக அவர் கை கொடுத்ததற்காக பிரச்னை ஏற்பட்டது குறித்து புரியவில்லை. சித்து சரியான செயலை தான் செய்துள்ளார். அவர் பாராட்டுக்குரியவர். இரு நாடுகளும் நண்பர்களாக மாற, சித்து இந்திய பிரதமராகும் வரை காத்திருக்க தேவையிருக்காது என நம்புகிறேன். பாகிஸ்தான் ராணுவமும், அரசும் ஒரே பக்கத்தில் தான் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். இந்தியாவுடனான உறவை பாக்., விரும்புகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

-dinamalar.com

TAGS: