காலிஸ்தான் ஆதரவாளருடன் சித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை

பாகிஸ்தானில் நடந்த விழாவின்போது காலிஸ்தான் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தானின் கர்தார்பூரில், சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் அடக்கஸ்தலத்தில் தர்பார் சாகிப் குருத்வாரா கட்டப்பட்டு உள்ளது. இந்த நகரை இந்தியாவின் பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள தேரா பாபா நானக் நகருடன் இணைக்கும் விதமாக 4.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள வசதியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று கர்தார்பூர் நகரில் நடந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வா, இந்தியாவின் மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டிப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர் கோபால் சிங் சாவ்லாவுடன், சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சித்துவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாவ்லா தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம், சித்துவுக்கு எதிராக மீண்டும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை விமர்சித்துள்ள பாஜக, ‘‘பாகிஸ்தான் மண்ணில் இது போன்ற தவறான யுக்திகளுடன் செயல்படுவதை புறந்தள்ளிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளது.

-athirvu.in

TAGS: