தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் சிபிஐ அதிரடி.. போலீஸ் மீது வழிப்பறி, கொள்ளை வழக்குகள் பதிவு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொலை செய்ய காரணமாக இருந்ததாக காவல்துறை, வருவாய் துறையினருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வலியுறுத்தி, பொதுமக்கள் மாபெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர் அப்போது காவல்துறை மற்றும் பொதுமக்கள் நடுவே மோதல் ஏற்பட்டது.

போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் பலியாகினர். பல பகுதிகளிலும் சொத்துக்கள் சேதம் அடைந்தன. இதுதொடர்பாக தூத்துக்குடியில் பல்வேறு காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விசாரணை

இதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இரு பகுதிகளாக விசாரணை தொடங்கியது. ஒரு பகுதி போராட்டம் நடத்தியது தொடர்பாக, மற்றொரு பகுதி விசாரணை என்பது துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்பது தொடர்பாகவும் நடைபெற்றது.

வழக்குகள்

ஆனால் சிபிசிஐடி விசாரித்தால், இந்த வழக்கு நியாயமாக இருக்காது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணை முடிவில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது யார்

இதையடுத்து சிபிஐ தனிப்படை அமைத்து, அந்த தனிப்படை, தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றது. அதேநேரம் துப்பாக்கி சூடுக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரிக்க வில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில்தான் தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர், அர்ஜுனன் சிபிஐயிடம் துப்பாக்கி சூடு தொடர்பாக புகார் அளித்தார். அதையேற்று, புதிதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

7 பிரிவுகளில் வழக்கு

7 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கூட்டுச்சதி, ஒரே திட்டத்தின் அடிப்படையில் கூட்டாக செயல்படுதல், வழிப்பறி, கொள்ளை, கொலை வெறி தாக்குதல், பிறருக்கு காயம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசு ஊழியர்கள் சட்டத்தை மதிக்காமல் செயல்படுதல், தவறான ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது சிபிஐ. காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த அதிகாரியின் பெயரும், வழக்கில் இடம்பெறவில்லை. யார் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டார்கள் என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

tamil.oneindia.com

TAGS: