சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கத் தடை : பொன். மாணிக்கவேலுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு

தமிழ்நாட்டில் கோவில் சிலைகள் திருடப்பட்டு, கடத்தப்படுவது தொடர்பான வழக்குகளை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கோவில் சிலைகள் திருடப்பட்டு, கடத்தப்படுவது தொடர்பான வழக்குகளை தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரித்து வருகிறது. இதன் தலைவராக இருந்த ஐ.ஜி. பொன். மாணிக்கவேலை மாற்றக்கூடாது என்றும் அவர் தலைமையில் சிறப்பு விசாரணைப் பிரிவு ஒன்றை அமைப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று உத்தரவிட்டது.

இருந்தபோதும், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்போவதாக தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதியன்று அரசாணை ஒன்றை வெளியிட்டது.

இதனை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்றக்கூடாது எனக் கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்த பொன். மாணிக்கவேல் நவம்பர் 30-ம் தேதி ஓய்வுபெறுகிறார். இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங்கை நியமித்து இன்று காலையில் தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைNOAH SEELAM/AFP/GETTY IMAGES
Image captionகோப்புப்படம்

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்துசெய்யப்படுவதாகவும் இன்று ஓய்வுபெறும் பொன். மாணிக்கவேல் மேலும் ஓராண்டு அதே பதவியில் நீடிப்பார் எனவும் அவருக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். மாணிக்கவேல், பணி நீட்டிப்பு தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். “இதுவரை இரவு – பகல் பார்க்காமல் வேலை பார்த்தேன். இனி கனவிலும் நனவிலும் வேலை பார்ப்போம்” என்று தெரிவித்தார்.

ரயில்வே ஐ.ஜியான தான் இதுவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் கூடுதல் பணியாற்றியதற்காக சம்பளம் வாங்கவில்லையென்றும் எல்லா வழக்குகளையும் விரைவில் முடிக்கப்போவதாகவும் பொன். மாணிக்கவேல் தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: