போலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்

தமிழ் தொலைக்காட்சிகளில் சித்த மருத்துவர் என்ற அடையாளத்துடன் தீராத வியாதிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி போலி மருத்துவர்கள் பங்கேற்பதால் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு, தமிழ் நாடு சித்த மருத்துவக் கவுன்சில் பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் சிலவற்றில் இரவு நேரங்களில் நேரலையில் பேசும் நபர்கள் உடனடி நிவாரணம் அளிப்பதாகவும், தங்களிடம் சிகிச்சை பெற்றுள்ளக்கொள்ளுமாறும் நேயர்களை வலியுறுத்துகின்றனர் என்பதால், தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்த நிகழ்ச்சிகளை ரத்துசெய்யவேண்டும் என பதிவாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

போலி சித்த மருத்துவர்களின் நிகழ்ச்சிகள் அபாயமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறும் பதிவாளர் ராஜசேகர், ”போலி மருத்துவர்களின் நிகழ்ச்சிகளை நிறுத்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளோம். இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்தால்,சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எந்த மருத்துவரும் மருந்துகளைப் பற்றியோ, சிகிச்சைகளைப் பற்றியோ விளம்பரங்கள் செய்யக்கூடாது என்பது இந்திய மருத்துவத்திற்காக கவுன்சிலின் விதி. ஆனால் மருத்துவர்கள் அல்லாதவர்கள், எந்தவித பதிவும் செய்யாதவர்கள் சிகிச்சைகளை பரிந்துரை செய்கின்றனர்,” என்று கூறுகிறார்.

குறிப்பாக பாலியல் ரீதியான உடல்நல கோளாறுகளை நேரலையில் பேசி, தீர்வு அளிப்பதாக வாக்குறுதி கொடுக்கும் போலி மருத்துவர்கள் குறித்து பேசிய ராஜசேகர், மக்களை எளிதில் ஏமாற்றுகிறார்கள் என்கிறார்.

”ஒரு சிலர் போலி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு அல்லது பாரம்பரிய மருத்துவர்கள் என பொய்யான அடையாளங்களுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். ஒரு சில மருத்துவர்கள், தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காக செல்வாக்கு மிகுந்த நபர்களின் துணையோடு செயல்படுகிறார்கள்,” என்கிறார்.

போலி மருத்துவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்ச்சியான நிகழ்வாக உள்ளது என்றும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம் என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன்.

”போலி மருத்துவர்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் புகார் கொடுப்பதற்காக காத்திருக்காமல், நிகழ்ச்சிகளில் தோன்றும் மருத்துவர்கள் மீது சட்டரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்கமுடியும். அந்த மருத்துவர்களின் சான்றிதழை சரிபார்க்கலாம், அவர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகள், சிகிச்சைகள் தீராத வியாதிகள் தொடர்பானவை என்பதைக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். முறையான சுகாதார வசதிகளை ஏற்படுத்தித்தருவது அரசின் கடமை என்பதால், போலி சிகிச்சைகளை தடுப்பதும் அதில் அடங்கும்,”என்கிறார் சிவராமன்.

ஏமாற்றப்பட்ட நோயாளிகள் நிவாரணம் தேடுவதற்கு பதிலாக புகார் கொடுக்க முன்வருவது சிரமம் என்பதால், போலி மருத்துவர்கள் மீதான புகார்களுக்காக காத்திருப்பதைவிட அரசாங்கம் உடனடியாக தலையிடவேண்டும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.

பல்வேறு தொலைக்காட்சிகளில் சித்த மருத்துவர்களின் நிகழ்ச்சிகளை பார்த்த நபர்களிடமும் பேசினோம். பெயர் குறிப்பிடவிரும்பாத நபர்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தோன்றும் மருத்துவர்களிடம் பேசியபோது, தலைமுடி வளர்வது மற்றும் அதிக உடல்எடை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.50,000 வரை செலவாகும் என்று கூறியதாக தெரிவித்தனர்.

சென்னைவாசி சி. நாகராஜன் பார்த்த நிகழ்ச்சிகள் பற்றி கேட்டபோது, சில மருத்துவர்கள் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற வியாதிகளுக்கு கூட சிகிச்சை அளித்து குணப்படுத்தமுடியும் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் என்று கூறினார். ”இந்த மருத்துவர்கள் போலியானவர்கள் என்பதை தெரியாதவர்கள் பணத்தை மட்டும் இழப்பதில்லை, சித்த மருத்துவம் மீதான நம்பிகையையும் சேர்த்து இழக்கிறார்கள்,”என்கிறார் நாகராஜன். -BBC_Tamil

TAGS: