டெல்லியை அடுத்து சென்னையிலும் போராட்டம்.. சென்ட்ரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெல்லியில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

மொத்தம் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடந்தது.தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சேதங்களை விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

நதிகளை இணைக்க வேண்டும், விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை வைக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் இந்த கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தற்போது தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சென்னையிலும் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும் ரயில் நிலையத்திலேயே இவர்கள் களமிறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் இன்று ரயில் மறியல் போராட்டம் செய்ய இருப்பதாக தகவல்கள் வருகிறது. போலீசார் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

tamil.oneindia.com

TAGS: