சென்னை: கஜா புயல் பாதித்த காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அது விவசாயிகள் தற்கொலை.
அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்து வருவது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. புயல் பாதிப்பிலிருந்து மீள முடியாத நிலைக்குப் போய் விட்டதை நினைத்தும், இருந்ததை எல்லாம் இழந்த துயரத்திலும் விவசாயிகள் சிலர் தற்கொலை முடிவை நாடியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
மீண்டு வர முடியும் என்ற எண்ணத்தை எத்தனைதான் ஊட்டினாலும் அவர்களால் இயல்பு நிலைக்கு வர முடியாத நிலை இன்னும் நிலவுவதையே இது காட்டுகிறது என்று உணர முடிகிறது.
வாழ்வாதாரங்கள்
மீள முடியாத சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது காவிரி டெல்டா. மீண்டு வருகிறார்கள் என்ற வார்த்தையெல்லாம் சும்மா ஒப்புக்குத்தான். அவர்கள் முழுமையாக மீள பல வருடமாகும். காரணம், ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் தொலைத்து விட்டு நிற்கின்றனர்.
உதவிகள் கிடைக்கவில்லை
மீட்பு நிவாரணப் பணிகள் நடக்கிறது என்றாலும் கூட முழு வீச்சில் இல்லை என்றுதான் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் போதிய அளவிலான உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை என்பதும் இன்னொரு முக்கிய காரணம். இதனால் மக்கள் மனதளவில் நொறுங்கிப் போயுள்ளனர்.
சோகத்தில் மக்கள்
ஏற்கனவே புண்பட்டுப் போயுள்ள அவர்களுக்கு எப்படி மீண்டு வரப் போகிறோம், அரசிடமிருந்து என்ன மாதிரியான நிவாரணம் கிடைக்கப் போகிறது, காடு, தோப்பை வைத்து நிறைய திட்டமிட்டோமே. அதையெல்லாம் எப்படி சரி செய்யப் போகிறோம் என்ற சோகத்தில் மக்கள் பலர் உள்ளனர்.
மனவள ஆலோசனை
இத்தகைய காரணங்கள்தான் பலரை தற்கொலை உணர்வுக்கு இட்டுச் செல்கின்றன. அவர்களுக்கு நிவாரணத்தோடு, மன வள ஆலோசனையும் மிகவும் அவசியமாக தற்போது தேவைப்படுகிறது. போதிய அளவிலான கவுன்சிலிங் கொடுக்கப்பட்டால்தான் அவர்கள் தங்களது துயரத்திலிருந்து மீண்டு வர முடியும்.
குறை சொல்ல முடியாது
யாரையும் இந்த சமயத்தில் குறை சொல்ல முடியாது. குறை சொல்வது எளிது. ஆனால் துன்பத்தில் மூழ்கியிருப்பவர்களை மனதளவில் நம்பிக்கை கொடுத்து மீட்டுக் கொண்டு வர வேண்டியது முக்கியமாகும். அதை அரசு மட்டுமல்லாமல் அனைவரும் இணைந்து செய்ய வேண்டியது அவசியம்.