மேகதாது விவகாரம்: 7ம் தேதி கர்நாடகா ஆய்வு

பெங்களூரு : தமிழக அரசின் கடும் எதிர்ப்புக்கிடையிலும், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, வரும் 7ம் தேதி, நிபுணர் குழுவுடன் சென்று கர்நாடகா நேரடி ஆய்வு நடத்துகிறது.

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு, சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கர்நாடகாவுக்கு, மத்திய நீர் வள ஆணையம் சமீபத்தில் அனுமதியளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. டில்லியில் இன்று(டிச.,3) நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், மேகதாது திட்டத்துக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில், காங்கிரசை சேர்ந்த கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், இன்று மாலையில் அவசர செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடத்தினார்.

7ல் ஆய்வு:

அவர் அளித்த பேட்டி: மேகதாது அணை கட்டுவதற்கு, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கு, மத்திய நீர் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அறிக்கை தயாரிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை, ஏற்கனவே செய்துள்ளோம். வரும் 7ல், நிபுணர் குழுவுடன் மேகதாதுவில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும். வனத்துறை அதிகாரிகள், அணை கட்டும் நிபுணர்கள், நிதித்துறை அதிகாரிகளும் வரவுள்ளனர். இதன் பின், சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சிக்கு சென்று, அணையின் இறுதி பாயிண்ட் அமைப்பதற்கு ஆய்வு செய்யவுள்ளோம். இதன் பின், அன்றிரவு, கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் தங்கவுள்ளோம்.

தமிழகத்துக்கு வசதி:

அறிக்கை தயாரிப்பதற்கு, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நல்ல பணிகள் செய்யும் போது, எதிர்ப்புகள் வரும். மேகதாதுவில் அணை கட்டுவது, என் குறிக்கோள் என மனதில் திட்டம் தீட்டியுள்ளேன். அணை கட்டுவதால், 95 சதவீதம் தமிழகத்துக்கு வசதியாக இருக்கும். இந்த அணை நீரில், ஒரு ஏக்கர் கூட விவசாயத்துக்கும் பயன்படுத்த மாட்டோம். இது பற்றி, தமிழகத்துக்கு விளக்க வேண்டும். 64 டி.எம்.சி., நீர் சேமிக்கும் அளவுக்கு, முதல்கட்ட அறிக்கை தயாரித்துள்ளோம். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் என்ன குறிப்பிட்டுள்ளனர் என்று தெரியவில்லை. நோட்டீஸ் வந்த பின், பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

-dinamalar.com

TAGS: