உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷகர் மாவட்டத்தில் மத அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் தாக்கியதில் காவல்துறை அதிகாரி சுபோத் கே சிங் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், நான்கு பேரை விசாரித்து வருகின்றனர் என்று மூத்த காவல் அதிகாரி பிரசாந்த் குமார் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
இந்துமத அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் பசு வதைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக உள்ளூர் செய்தியாளர் சுமித் ஷர்மா கூறுகிறார். பசுவதை செய்யப்படுவதான தகவல்கள் கிடைத்ததை அடுத்து மஹாவ் கிராமத்தில் சாலை மறியல் நடத்தப்பட்டது என்று அவர் கூறுகிறார்.
போராட்டக்காரர்கள் வரம்புமீறி ஆவேசமாக நடந்துக் கொண்டபோது, போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டக்காரர்களும் போலீசாரை தாக்கியதில் சுபோத் குமார் உட்பட பலர் காயமடைந்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆட்சியர் கூறுவது என்ன?
மீரட் மாவட்ட ஆட்சியர் அனுஜ் ஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “திங்கள்கிழமை காலை 11 மணியளவில், சிரங்வாடி கிராமத்தில் பசு வதை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. காவல்துறையினரும், செயற்பாட்டாளர்களுடம் அங்கு சென்று நடவடிக்கையில் இறங்கினோம். அதற்குள் அக்கம்பக்கம் இருந்து மக்கள் சாலைகளில் வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள்” என்றார்.
“முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கினோம். ஆனால் அதற்குள் அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினார்கள். இந்தத் தாக்குதலில் ஸ்யானா காவல்நிலைய எச்.எஸ்.ஓ சுபோத் குமார் இறந்துவிட்டார்” என அவர் தெரிவித்தார்.
“நிலைமையை கட்டுக்குள் வைக்க, அங்கு கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யாரும் சட்டத்துடன் விளையாட முடியாது, சமூகவிரோதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்” என்று புலந்த்ஷகர் மூத்த போலீஸ் அதிகாரி கிருஷ்ண் பஹாதுர் சிங் கூறுகிறார்.
காயமடைந்த மற்றொரு காவல்துறை அதிகாரியின் உடல்நிலை சீராக இருப்பதாக ராம் சிங் கூறுகிறார்.
காவல்துறை மற்றும் போராட்டம் நடத்தியவர்களிடையே ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்களில் இரண்டு பேரும் காயமடைந்திருப்பதாக அவர் கூறுகிறார். -BBC_Tamil