இந்திய சுதந்திரத்துக்காக துப்பாக்கி ஏந்திய கோவிந்தம்மாளை மறந்த கட்சிகளும், பொதுமக்களும்!!

இந்தியாவுக்கு ஆங்கில ஏகாதியபத்தியத்திடம்மிருந்து சுதந்திரம் வேண்டி வெளிநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) இணைந்து பணியாற்றிய கோவிந்தம்மாள் என்கிற வீராங்கனை காலமானார்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த முனிசாமி என்பவரின் மகளாக 1926-ல் கோவிந்தம்மாள் பிறந்தார்.  அவருடைய ஒரு வயதில் அவரது தந்தை வேலைக்காக மலேசியா சென்றபோது, தனது குடும்பத்தாரையும் உடன் அழைத்து சென்றுள்ளார். அங்கு கோலக்கிள்ளான் என்ற ஊரில் அஞ்சல்துறை ஊழியராக முனிசாமி பணியாற்றியுள்ளார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக நகைக் கடை நடத்தியுள்ளார். அவரின் மகள் கோவிந்தம்மாள் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அக்கால வழக்கப்படி சிறுவயதிலேயே திருமணம் செய்துவைத்தனர். கோவிந்தம்மாளை மலேசியாவில் ரப்பர் எஸ்டேட்டில் எழுத்தராக பணிபுரிந்த அருணாச்சலம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இருவரும் குடும்பம் நடத்திவந்தனர். இவர்களுக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.

அப்போது இந்தியாவில் சுதந்திர போராட்டம் தீவிரமாக இருந்தக்காலக்கட்டம். மலேசியாவில் மலாக்கா பிராந்தா என்ற இடத்தில் இந்தியர்கள் மத்தியில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உரையாற்றியுள்ளார்.  மலேசியாவில் இந்தியாவை ஆண்டுக்கொண்டுயிருந்த ஆங்கில ஏகாதியபத்திய அரசுக்கு எதிராக இராணுவம் கட்டமைத்தார் நேதாஜி. அதற்காக பொருளீட்டவும், வீரர்களை சேர்க்கவே மலேசியா வந்தியிருந்தார். நேதாஜியின் உரையை கேட்ட கோவிந்தம்மாள், அந்த இடத்திலேயே ராணுவ நிதியாக தான் அணிந்திருந்த 6 பவுன் தங்க வளையலைக் கழற்றிக் கொடுத்தாராம்.  பிறகு திருமணத்தின் போது தாய் வீட்டு சீதனமாக கிடைத்த ஒரு ஏக்கர் ரப்பர் தோட்டத்தையும் ஐ.என்.ஏ. வுக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார்.

ஐ.என்.ஏ. ராணுவத்தில் பெண்களுக்கென ஜான்சிராணி ரெஜிமெண்ட் ஏற்படுத்தியபோது 1943-ல் அதில் சிப்பாயாக சேர்ந்தார் கோவிந்தம்மாள்.  1000 பெண்கள் கொண்ட அந்த படையில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு ரக துப்பாக்கிகள் சுடும் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  அந்த 100 பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றவர் கோவிந்தம்மாள்.  இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியபோது, ராணுவ முகாமில் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் கோவிந்தம்மாள் இருந்தபோது மாறுவேடத்தில் நேதாஜி ராணுவ முகாமுக்கு சென்றுள்ளார்.   ராணுவ முகாமுக்குள் அவர் செல்ல முயன்றபோது அவரை கோவிந்தம்மாள் தடுத்து நிறுத்தி அவரை அனுமதிக்க மறுத்துள்ளார்.  தான் நேதாஜி எனக் கூறியபோதும் அவரை உள்ளே விட மறுத்துள்ளார். பிறகு நேதாஜி மாறுவேடத்தை களைத்து தன்னுடைய முகத்தை காட்டிய பிறகு தான் அவரை உள்ளே அனுமதித்துள்ளார்.   அதனால் நேதாஜியிடம் பாராட்டும் பெற்றுள்ளார் கோவிந்தம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1949-ல் கணவருடன் ஆம்பூருக்கு வந்தார் கோவிந்தம்மாள்.  லாரி ஓட்டுநராக பணியாற்றிய அவரது கணவர் 1960-ல் நடந்த ஒரு விபத்தில் இறந்துள்ளார்.  பிறகு கோவிந்தமாள் ஒரு பள்ளியில் மதிய உணவு சமைத்தல், மாவு அரைவை மில்லில் வேலை என பல்வேறு வேலைகளை செய்துள்ளார்.  வயோதிகம் காரணமாக எந்த வேலையும் செய்யாமல், சொந்த வீடு கூட இல்லாமல் மாநில அரசு வழங்கும் ஓய்வூதியத்தை வாங்கி வாழ்ந்து வந்தார்.  அவருக்கு சில வாரங்களாக உடல்நிலை முடியாமல் அவதிப்பட்டு வந்தார். கடந்த 2016 டிசம்பர் 2 ந்தேதி இரவு மரணித்தார். டிசம்பர் 3 ந்தேதி இரவு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு ஓரளவு அரசியல் கட்சியினர் வந்துயிருந்தனர். அவர் மறைந்து இரண்டு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பாக அவரது குடும்பத்தினர் அவரது நினைவு நாளை அனுசரித்தனர். இதற்கு யாரும் செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. அவரை சுத்தமாக அதற்குள் மறந்துவிட்டனர் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும். அவரது நினைவு நாளை முன்னிட்டு குறைந்தபட்சம் நினைவு கூறல் கூட நடக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

-nakkheeran.in

TAGS: