புற்றுநோயினால் காலமான, பிரபல நெல் ஆராய்ச்சியாளர் நெல்.ஜெயராமனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் நடைப்பெற்றது.
டெல்டா மாவட்ட விவசாயிகள் திரண்டு வந்து மரியாதை செலுத்திய வண்ணம் இருந்தனர். திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர்களும், பொதுவுடைமை போராளிகளும், அதிக அளவில் வருகை தந்தனர்.
கல்லூரி மாணவர்கள், முற்போக்கு பேசும் சமூக இணைய தளவாசிகள், வவசாய முதலாளிகள், இயற்கை விரும்பிகள் என சகல தரப்பும் அங்கு வந்த வண்ணம் இருந்தனர்.
டெல்டா மாவட்டங்களில் முஸ்லிம் சமூகத்தினர் 30 சதவீதத்திற்கும் அதிகமான நிலங்களை கொண்டவர்களாக இருப்பதால், அவர்களுக்கெல்லாம் இவர் நல்ல தோழமை கொண்ட ஆலோசகராக இருந்திருக்கிறார். இன்று காலை முதலே அவர்கள் திரண்டு வந்து மரியாதை செலுத்தினர்.
உச்சக் கட்டமாக, இன்று கட்டிமேடு பெரிய பள்ளிவாசலில், வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின்பு அவரது பணியை புகழ்ந்து, அவரது குடும்பத்திற்கு ஜமாத் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.
அவரது இறுதி ஊர்வலம் மிகுந்த சோகம் தவழ, நிமிடத்திற்கு ஒரு சப்தம் என பறை ஒலிக்க, மக்கள் திரளுடன் நகர்ந்தது.
அப்போது அவர் மீட்டெடுத்த நெல் ரகங்களின் பெயர்களை கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பசுமை முழக்கங்களை எழுப்பி மரியாதை செய்தனர்.
அதிமுக சார்பில் அமைச்சர் காமராஜ், திமுக சார்பில் மாநிலங்களவை திருச்சி சிவா, மஜக சார்பில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ கோ.பழனிச்சாமி, விவசாய சங்க தலைவர்கள் பி.ஆர். பாண்டியன், மன்னார்குடி ரங்கநாதன், மஜக மாநில விவசாய அணி செயலாளர் நாகை. முபாரக், திருவாரூர் மாவட்ட மஜக துணைச் செயலர் அய்யூப், நாகை தெற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலர் ஜலால், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் அணி செயலாளர் முகம்மது ஷேக் மற்றும் கட்டிமேடு மஜக வினரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
-nakkheeran.in