கோடையில் கஞ்சா விவசாயம்!;பயிரிட்டு வளர்த்தவர் கைது!

கோடை இளவரசியான கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலாதளமாக இருந்து வருகிறது. தினசரி இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகைதந்து  கோடை இளவரசியின் இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.  அதோடு கொடைக்கானல் மேல் மலைப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் சென்று அங்குள்ள இயற்கை அழகுகளை பார்த்து ரசித்து அங்கேயே தங்கி விட்டும் போவார்கள். இதில் வட்டகானல் பகுதியில் தங்கக்கூடிய சுற்றுலா பயணிகள் பலர் அப்பகுதியில் விற்கக்கூடிய போதை காளானை வாங்கி சாப்பிடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அதுபோல் கொடைக்கானலில் பலர் கஞ்சா போதைக்கும் அடிமையாகி வந்தனர். இந்த நிலையில்தான் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள பள்ளங்கி கோம்பையில் மூர்த்தி என்பவர் தனது விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டு வருகிறார் என்ற தகவல் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகருக்குத் தெரிந்தது.

அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி விசிட் அடித்து மூர்த்தியின் விவசாய தோட்டத்தை சோதனை செய்தபோது அந்த விவசாய நிலங்களுக்கு இடையில் நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த செடிகளை பறிமுதல் செய்ததுடன்  மட்டுமல்லாமல் கஞ்சா செடிகளை பயிரிட்ட மூர்த்தியையும் கைது செய்தனர். ஆனால் மாவட்ட அளவில் போதை தடுப்பு பிரிவு போலீசார் இருந்தும்கூட இப்படி கஞ்சா செடி விவசாய நிலங்களில் விளைவிக்கப்படிருப்பது கண்டு கொள்ளப்படவில்லை . ஆனால் லோக்களிலுள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்து அந்த செடிகளை கைப்பற்றியதை  அறிந்த போலீஸ் உயர்அதிகாரிகளும்,பொதுமக்களும் இன்ஸ்பெக்டர் ராஜசேகரை பாராட்டி வருகின்றனர்.

ஆனால் இதுபோல் மேல்மலை, கீழ்மலைப்பகுதியில் உள்ள கீழானவயல், கோம்பைக்காடு, மூங்கில்பள்ளம் உள்பட சில பகுதிகளில் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடங்களிலும், வனப்பகுதிகளிலும் அப்பகுதியில் உள்ள சில விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிர்களுக்கு இடையே கஞ்சா பயிரிட்டு வருகிறார்கள்.

இது தெரிந்தும் கூட இன்னும் போதை தடுப்பு போலீசார் மெத்தனம் காட்டி வருகிறார்களே தவிர  அதைத் தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி கோடை மலைப் பகுதிகளில் விளையக்கூடிய கஞ்சா மற்ற மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டும் வருகிறது.

-nakkheeran.in

TAGS: