அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டுவர வலியுறுத்தி திரண்ட 50,000 பேர்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் விஷ்வ இந்து பரிஷத்தால் இன்று கூட்டம் நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சில தினங்களே இருக்கும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 50ஆயிரம் பேர் பங்கு கொண்டனர்.

இவர்களின் முக்கிய கோரிக்கை அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதே.

விஷ்வ இந்து பரிஷத் உட்பட பல இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.

பேரணி

அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றம் தாமத்தப்படுத்துகிறது என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

கடந்த அக்டோபரில் இருந்து பல்வேறு இடங்களில் மதக் கூட்டங்கள் நடத்திவரும் விஷ்வ இந்து பரிஷத் இன்று இந்த மதக்கூட்டத்தை மீண்டும் நடத்தியுள்ளது.

விஷ்வ இந்து பரிஷத்தை பொறுத்த வரையில், டெல்லியில் நடைபெறும் இக்கூட்டம் ‘கோவில் கட்ட சட்டம் கொண்டுவர வேண்டும்’ இயக்கத்தின் மூன்றாவது கட்டமாகும். முதல் கட்டத்தில் வி.எச்.பி, சாதுக்கள் மூலமாக குடியரசுத்தலைவரிடம் இது தொடர்பாக மனு அளிப்பது, ஆளுநர்கள் மற்றும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது ஆகியவற்றை செய்து முடித்தது.

பேரணி

ஆளும் மற்றம் எதிர்கட்சியினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராமர் கோயில் கட்ட சட்டம் கொண்டுவருவதற்கு ஆதரவு தருவதாக உறுதி அளித்திருப்பதாக அந்த அமைப்பின் துணை பொதுச் செயலாளரான சுரேந்திர ஜெயின் தெரிவித்திருந்தார்.

ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது என்று கூறும் அரசியல் சாசன வல்லுநர்கள், அப்படி சட்டம் கொண்டுவரப்பட்டால் உடனடியாக அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அச்சட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறுகின்றனர்.

மேலும், மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால், அவசர சட்டம் கொண்டு வருவது என்பது மத்திய அரசுக்கு கடினமானதாக இருக்கலாம்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சட்டம் கொண்டுவர வலியுறுத்தப்படுவது ‘அரசாங்கத்தின் உதவியுடன் நடைபெறும் ஓர் அரசியல் நகர்வு’ என்று கூறப்படுகிறது. -BBC_Tamil

TAGS: