கடந்த சில நாட்களாக எல்.எம்.ஈ.எஸ். மற்றும் ராமர்பிள்ளைதான் பேசு பொருளாக இருக்கின்றனர். ராமர் பிள்ளை அனைவரையும் ஏமாற்றுவதாக எல்.எம்.ஈ.எஸ்.-இல் வெளிவந்த ஒரு வீடியோதான் இதற்கு காரணம். இதுகுறித்து எல்.எம்.ஈ.எஸ். நிறுவனத்தின் நிறுவனர் பிரேமானந்த் சேதுராஜனிடம் நக்கீரன் பேட்டி கண்டது. அப்போது அவர் கூறியது…
ஐந்து லட்சம் வேலையை விட்டுவிட்டு இங்கு வந்து அறிவியல் சொல்லித்தர என்ன காரணம்?
நான் வாங்கிய அடிகள்தான் காரணம். அமெரிக்காவில் நான் வேலை பார்த்த குழுவில் 40 முதல் 50 வெள்ளையர்கள் இருப்பார்கள். அவர்களிடம் போய் பேசவே முடியாது. அவ்வளவு அறிவுத்தன்மையுடன் பேசுவார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை பற்றி பேசினார்கள் என்றால் அவ்வளவு ஆழமாக பேசுவார்கள். அது எனக்கு ஒரு ஆதங்கத்தை ஏற்படுத்தியது. சிறு வயதில் இதுபோன்று சொல்லிக் கொடுக்காததால் எனக்கு அறிவுத்தன்மை அவ்வளவாக இல்லை. அதனால் அவர்களிடம் கலந்து பேச முடியவில்லை. அவர்களிடம் பேசவேண்டும் என்றால் அடிப்படையாக அறிவுத்தன்மை தேவைப்படுகிறது. அவர்களுடன் கலந்துரையாடாமல் இருந்தால் என்னுடைய சர்வைவலுக்கு பாதிப்பு ஏற்படும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்னஸ் என்று சொல்வார்களே அதற்காக, அவர்களிடம் பேசுவதற்கு என்றே மீண்டும் அங்கு கல்வி கற்க ஆரம்பித்தேன். அங்கு ஒவ்வொன்றாக படிக்கத் தொடங்கிய பின்னர்தான், ஏன் நமக்கு இவ்வாறு எளிதாக சொல்லிக்கொடுக்கவில்லை என்று மேலும் ஆதங்கம் வந்தது. இதே போன்றுதான் நம் ஊர் மாணவர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சொல்லிக்கொடுக்க பிடிக்கும் என்பதும் காரணம்.
ஒருவர் சொல்கிறார் புதிதாக கண்டுபிடிப்பவன் தான் சயிண்டிஸ்ட், 10 பேரை உடன் வைத்து வீடியோ போடுவதனாலும், 10 அறிவியல் வார்த்தைகள் பேசுவதனாலும் சயிண்டிஸ்டாக முடியாது என்கிறார். யார் சயிண்டிஸ்ட்?
நாங்கள் கண்டுபிடித்தோம் என்று சொல்லவே இல்லையே. நாங்கள் ஒருவருக்கு கற்றுத்தருவதில் கைதேர்ந்தவர்கள். எங்களிடம் ஒரு விஷயத்தை கொடுத்தால் அதை பற்றி புரிந்துகொண்டு மக்களுக்கு எளிதாக விளக்குவதில் வல்லவர்கள். நாங்கள் எந்த வீடியோவிலும் விஞ்ஞானி என்று சொல்லிகொண்டதே இல்லை. நான் ஒரு கண்டுபிடிப்பாளனோ அல்லது விஞ்ஞானியோ இல்லை. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்.எம்.ஈ.எஸ் பிரபலமாகுவதற்காக ராமர் பிள்ளையை வைத்து நடத்திய நாடகமாக இது?
இதற்கு முன் நாங்கள் பதிவிட்ட வீடியோக்களுக்கு வந்த கமெண்டுகளை பார்த்தாலே தெரிந்துவிடும், மக்களில் பலபேர் ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் பற்றி வீடியோ போடுங்கள் என்று கேட்டிருந்தனர். அதனால்தான் நாங்கள் அவரை தொடர்புகொண்டு வீடியோ எடுத்தோம். முதலில் அவரது இடத்திற்கு அழைத்தார். பிறகு அவர் எங்களை ஒரு உற்பத்தி பிரிவுக்கு அழைத்து செல்வார் என்று நினைக்கையில், அவர் வீட்டு சமையலறைக்கு அழைத்து சென்றார். வைத்திருந்த குச்சியை தண்ணீரில் போட்டு எரிய வைத்தார். எங்களுக்கு எல்லாம் ஒரே குழப்பாமாக இருந்தது. என்னடா நீரில் குச்சியை போட்டால் அது எரிபொருளாக மாறிவிடுகிறதா என்று குழப்பமும், பிரமிப்பும் கலந்திருந்தது. அதனால் அவரிடம் குச்சியை நீங்கள் கொண்டு வாருங்கள், தண்ணீரை நாங்கள் கொண்டுவருகிறோம் என்றோம். அதன்பின் நடந்த சோதனை முயற்சியிலும் நீர் கொழுந்துவிட்டு எரிந்தவுடன். நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டேன். பின்னர் அலுவலகம் வந்து ராமர் பிள்ளையை புகழ்ந்தே பேசிக்கொண்டிருந்தோம். இந்திய பொருளாதாரத்தையே இது மாற்றி அமைக்கப்போகிறது என்று எங்கள் குழுவில் பேசிக்கொண்டிருந்தோம். அதன் பின்னர், அந்த வீடியோக்களை எடிட் செய்யும்போது, எடிட்டர்கள் ராமர் செய்த ஏமாற்றுதணத்தை கண்டுபிடித்தனர். ஒரு மூன்று நாட்கள் அந்த எடிட்டர்கள் எங்களை கலாய்த்து தள்ளினார்கள், ‘இவர் தானே இந்திய பொருளாதாரத்தை மாற்ற போகிறார். உங்களை அவர் ஏமாற்றியிருக்கிறாருங்க’ என்றார்கள்.
ராமர் பிள்ளையின் பையைத் திறந்ததால்தான் இந்தியா வல்லரசு ஆகாமல் போய்விட்டது என்று சொல்லப்படுகிறதே?
அவர் எங்களிடம் செய்துகாட்டிய இந்த இரண்டு செய்முறைகளின்போதுமே இவ்வாறு ஏமாற்றியிருக்கிறார். ஆனால், இதைதாண்டி ஏதோ அவரிடம் ஒன்று இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. 20 வருடமாக ஒரு மனிதன், ‘நான் ஒன்றை வைத்திருக்கிறேன்’ என்று சொல்கிறார் என்றால் எதாவது ஒன்று அவரிடம் இருக்கிறது என நான் நம்புகிறேன். அது உண்மையிலேயே ஒர்க்கவுட்டாகி இந்தியா வல்லரசாகிறது என்றால் அதை பார்த்து முதலில் மகிழ்ச்சி அடைபவன் நானாகதான் இருப்பேன். நாங்கள் அவருடன் நிற்போம். இப்போதுகூட சொல்கிறேன் நாங்கள் அவருடன் இருக்கத் தயாரக இருக்கிறோம். ஆனால், அவர் எங்களிடம் செய்து காட்டிய செய்முறை தவறான ஒன்று, அதில் பிரச்சனை இருக்கிறது. நான் ஒரு அறிவியல் சேனல் வைத்துக்கொண்டு, குச்சியை போட்டால் நீரிலுள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன் பிரிந்துவிடும் என்றால் என்னைவிட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.
ராமர் பிள்ளை, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வைத்து பயமுறுத்துகிறாரா?
எங்களுக்கு அதை கண்டெல்லாம் பயம் இல்லை. ராமர் பிள்ளைக்கு சீமான் துணை நின்று, அவருடைய கண்டுபிடிப்பை சீமான் கொண்டுவருகிறார் என்றால் எனக்கு மகிழ்ச்சிதான். நான் பார்த்ததை சொல்லிவிட்டேன். அதற்காக ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்று நாங்கள் பயப்பட முடியாது.
பேட்டர்ன் ரைட்ஸ் என்றால் என்ன?
நம்மூர் பசங்களுக்கு பேட்டர்ன் மீதான அறிவு அவ்வளவாக இல்லை. நகரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரளவாவது அதனை பற்றிய அறிவு இருக்கும், கிராம மாணவர்களுக்கு அது பற்றி பெரிதாக அறிவு இல்லை. பேட்டர்ன் என்பது நீங்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை காத்து வைப்பதுதான். இது அந்த ஆணயத்தில் சென்று கையெழுத்தாகி ஃபைல்லாகிவிட்டால், அந்த கண்டுபிடிப்பிற்கு அவர் சொந்தம் கொண்டாடலாம். அதாவது அந்த கண்டுபிடிப்பை மற்றொருவர் டெவலப் செய்ய இயலாது. அப்படி செய்ய நினைத்தால் அதற்கு பேட்டர்ன் வாங்கியவர் ராயல்டி வாங்கிக்கொள்ளலாம். உங்களுடைய கண்டுபிடிப்பை மற்றொருவர் திருடக்கூடாது என்று நினைத்தால் அதற்கு பேட்டர்ன் கண்டிப்பாக தேவை. ராமர் பிள்ளை கூட இந்த கண்டுபிடிப்பிற்கு பேட்டர்ன் வாங்கவில்லை, ஆனால் அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேட்டர்ன் வாங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். அதுவும் எங்களுக்கொரு சந்தேகத்தை ஏற்படுத்த காரணம்.
-nakkheeran.in