அரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்

டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்துள்ளது என்பது, போராட்டத்தின் வடிவம் என்று, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரபல ஆங்கில ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ள ரகுராம்ராஜன் மேலும் கூறியதாவது: உர்ஜித் பட்டேல் ராஜினாமா என்பது கவலைதரும் விஷயம். அரசு ஊழியர் ராஜினாமா செய்வது என்பது, போராட்டத்தின் ஒரு வடிவம்.

எதிர்கொள்ள முடியாத பிரச்சினைகள் வரும்போதுதான், இதுபோன்ற ராஜினாமாக்கள் நிகழும். ரிசர்வ் வங்கியுடன் அரசு மேலும் சிறப்பான உறவை பேண வேண்டியது அவசியம். உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ய தூண்டியது என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு அரசு ஊழியர் அல்லது ரெகுலேட்டர் பதவியில் இருப்பவர், இப்படித்தான் தனது போராட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதைத்தான் உர்ஜித் பட்டேல் செய்துள்ளார் என்று கருதுகிறேன். எனவே அரசு இதை சரியாக கவனித்துக்கொள்வது அவசியம்.

ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு செயல்படும் தன்மையோடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்பு, இது அறிவுரை சொல்லும் குழுவாகத்தான் செயல்பட்டது. நிபுணத்துவம் பெற்றவர்கள் கொள்கை முடிவுகளை எடுத்தனர்.

இயக்குநர் குழு அறிவுரை மட்டும் கூறியது. இயக்குநர் குழுவை மேலும் செயல்படும் அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றுவது என்பது, நிபுணத்துவம் கொண்ட மேலாண்மை திறனை பாதிப்படையச் செய்கிறது. பொதுவானவரகளை இயக்குநர் குழுவில் அமர்த்தி அவர்கள் கொள்கை முடிவுகளில் தலையிடுகிறார்கள்.

இதுதான் நிலைமை என்றால், பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர்களையும் சரிசமமான அளவில் ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: