தேர்தல் முடிவுகள்: இந்த உற்சாகம் பா.ஜ.க-வை வீழ்த்த போதுமானதா?

இந்தியாவை ஆளும் இந்து தேசிய கட்சியான பா.ஜ.க தனது முக்கிய இரண்டு மாநிலங்களில் தோல்வி அடைந்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் இழுபறி நிலவி வருகிறது. அப்படியானால், இந்தியாவின் மூத்த கட்சியான காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுள்ளதா?

ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது. மத்திய பிரதேசத்தில் இழுபறி நிலவுகிறது.

சத்தீஸ்கரும், மத்திய பிரதேசமும் பா.ஜ.க வலிமையாக கால் ஊன்றிய மாநிலங்கள்.

2014 மக்களவை தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்தது காங்கிரஸ். 543 தொகுதிகளில் 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதன்பின் நடந்த சட்டமன்ற தேர்தல்களிலும் இந்த இறங்குமுகம் தொடர்ந்தது. இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

எண் விளையாட்டு

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தொகுதிகளில் 62 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. இந்தி மொழி பேசப்படும் இந்த பகுதிகளில் பா.ஜ.க வலுவாகவே இருந்து வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், 225 நாடாளுமன்ற தொகுதிகளில் 203 தொகுதியில் பா.ஜ.க வென்றுள்ளது.

ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடக்கும் சட்டமன்ற தேர்தல் இது. நாடாளுமன்ற தேர்தல் வரை வேறு எந்த சட்டமன்ற தேர்தலும் இல்லை என்பதால் இந்த ஐந்து மாநில தேர்தல் அனைவராலும் கூர்ந்து பார்க்கப்பட்டது.

மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பது, அவர்களது தொண்டர்களை உற்சாகப்படுத்தும். யாராலும் தோற்கடிக்க முடியாத கட்சி, தோற்கடிக்காத பிரதமர் என்ற பிம்பம் உடைந்திருப்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடனான கூட்டணி பேரத்திற்கும் உதவும்.

குறிப்பாக மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தை வழிநடத்திய ராகுலின் பிம்பம் வெகுவாக உயர்ந்திருக்கிறது.

ஆனால், அதே நேரம் சட்டமன்ற தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று கருத முடியாது.

மூன்று மாநிலங்களில் பின்னடைவு

மூன்று மாநிலங்களில் பா.ஜ.கவுக்கான பின்னடைவுக்கு ஆட்சி அதிகாரத்தின் மீது இருந்த கோபமும் ஒரு காரணம். இருந்தபோதிலும், இதனை பா.ஜ.கவின் படுதோல்வி என்று கூற முடியாத அளவுக்குதான் இருக்கிறது தேர்தல் முடிவுகள்.

மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்தது. ராஜஸ்தானில் மக்கள் எப்போதும் மாற்றி மாற்றியே வாக்களித்து வருகின்றனர்.

மோதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த மூன்று மாநிலங்களிலும் இருமுனை போட்டிதான் நடந்தது. அதாவது, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையேதான் போட்டி இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். காங்கிரஸின் தமது வெற்றிக்கு இவர்களை சார்ந்து இருக்க வேண்டும்.

பா.ஜ.கவுக்கு பெரும்பாலான மாநிலங்களில் திறமையான தலைவர்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் சறுக்கிய இடம் இதுதான். அது காந்தி குடும்பத்தின் கரிஷ்மாவை நம்பியே இருக்கிறது. இளம் தலைவர்களை செதுக்க தவறிவிட்டது.

இதற்கெல்லாம் மேலாக, பா.ஜ.கவுக்கு எதிரான ஒரு வலிமையான போக்கை வடிவமைக்க தவறிவிட்டது காங்கிரஸ்.

அசோகா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் கில்லஸ் வெர்னியர்ஸ், “ஊரக பிரச்சனைகள், வேலையில்லா திண்டாட்டம், வளர்ச்சியின்மையை மெத்தனமாக பா.ஜ.க அணுகியதுதான் இந்த தோல்விக்கு காரணம்” என்கிறார்.

வலதுசாரிய அரசியல்

இந்து தேசிய கொள்கைகள் கொண்ட கட்சியான பா.ஜ.க இந்தியாவின் பழமைவாத கட்சி. மாநில கட்சிகள் காங்கிரஸின் மிதவாத போக்கு அரசியலை கைப்பற்றிவிட்டன. அதாவது, காங்கிரஸின் மிதவாத போக்கு அரசியலை இப்போது மாநில கட்சிகள் கடைபிடிக்கின்றன. இது காங்கிரஸின் கட்சியின் இறங்கு முகத்திற்கு வழிவகுத்தது.

இந்தியாவில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளில் காங்கிரஸூக்கு பிடிமானம் இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.

அதேநேரம், 2019 பொதுத் தேர்தல் நிச்சயம் மோதி மீதான பொதுஜன வாக்கெடுப்புதான்.

இந்திய விவசாயிகள்

2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பா.ஜ. க பெரும் வெற்றி பெற்றது. மோதி பெரும் அதிகாரம் பெற்று ஆட்சியை கைப்பற்றினார். இந்நியாவில் உள்ள அனைத்து கேடுகளுக்கும் காங்கிரஸ்தான் காரணம். நாங்கள ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் சரிசெய்வோம் என பெரும் நம்பிக்கை அளித்து ஆட்சி பீடத்தில் அமர்ந்தது.

அதுமட்டுமல்ல, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும் அழைப்புவிடுத்தது.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று உறுதி அளித்தது. ஆனால், அது எதுவும் நிறைவேறாதது கோபத்தை அதிகரித்தது.

பின்னடைவுகள் இருந்தாலும், மோதியை எதிர்கொள்ள வலிமையான தலைவர்கள் இல்லாதது மற்றும் மாற்று கொள்கைகள் செயல்திட்டம் இல்லாதது காங்கிரஸுக்கு பின்னடைவுதான். நிச்சயம் இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு உற்சாகத்தை அளிக்கும். ஆனால், இந்த உற்சாகம் மட்டுமே பா.ஜ.க-வை வீழ்த்த போதுமானது அல்ல. -BBC_Tamil

TAGS: