மக்களின் ஆணையை ஏற்கிறோம்: மோடி

கடந்த மாத இறுதியிலும் இம்மாத ஆரம்பத்திலும் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள், நேற்று முன்தினமும் நேற்றும் வெளியான நிலையில், அத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கிடைத்த பின்னடைவுகளை ஏற்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேர்தல் இடம்பெற்ற மாநிலங்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்த பா.ஜ.க, போட்டியிட்ட அனைத்து சட்டசபைகளிலும் பின்னடைவைச் சந்தித்திருந்தது. மறுபக்கமாக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், முக்கியமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது.

இதனால், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில், பா.ஜ.கவுக்குப் பின்னடைவாக அமையுமெனக் கருதப்பட்டது.

இந்நிலையிலேயே, தனது கட்சிக்கான பின்னடைவை, பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். மக்களின் ஆணையை, “பணிவுடன்” ஏற்பதாகத் தெரிவித்த பிரதமர், சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய காங்கிரஸுக்கும், தனது வாழ்த்துகளை வெளிப்படுத்தினார்.

பா.ஜ.கவுக்குக் கிடைத்த இப்பின்னடைவு, கட்சித் தொண்டர்களுக்கு மனவுடைவை ஏற்படுத்தியிருக்கும் என்ற நிலையில், அவர்களையும் உற்சாகப்படுத்தவும், பிரதமர் முயன்றார். வெற்றியும் தோல்வியும், வாழ்வின் ஓர் அங்கங்கள் என்று தெரிவித்த அவர், “இந்தியாவின் அபிவிருத்திக்காக, இன்னும் அதிகமாக உழைக்கவும், மக்களுக்கு மேலும் சேவையாற்றுவதற்கான உறுதியை மேலும் எடுக்கவும், இம்முடிவுகள் உதவும்” எனத் தெரிவித்தார்.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியன, ஹிந்தியை மய்யமாகக் கொண்ட பிரதான மாநிலங்களாகக் கருதப்படும் நிலையில், அங்கு ஆட்சிபுரிவதற்காகக் கிடைத்த வாய்ப்புக்காகவும், பிரதமர் மோடி, நன்றி தெரிவித்தார். அம்மாநிலங்களில் செயற்பட்ட அரசாங்கங்கள், மாநில மக்களின் நலனுக்காக அயராது உழைத்தன என, அவர் தெரிவித்தார்.

-tamilmirror.lk

TAGS: