திருமாவுக்காக ஹெச்.ராஜாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் சீமான்.!

இந்திய அளவிலான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பேசும் கட்சிகளும், அதன் தலைவர்களும் (ராம்தாஸ் அத்வாலே, ராம்விலாஸ் பாஸ்வான்) கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே பாஜகவுடன் கூட்டு சேர்ந்து மத்திய அமைச்சரவையிலும் பங்கு வகித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பாஜகவுடன் கூட்டு சேர வாய்ப்பு கிட்டிய போதும் அதனை மறுத்துவிட்டு பாஜகவுக்கு எதிராக ஜனநாயக சக்திகளை அணிதிரட்டிக்கொண்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா.

எதிரவரும் சனவரி மாதத்தில் ராகுல் உள்ளிட்டோர் பங்குபெறும் தேசம் காப்போம் மாநாட்டை திருமா ஒருங்கிணைத்துள்ள நிலையில், தமிழக பாஜகவினர் தொடர்ச்சியாக திருமாவை விமர்சித்துவருகின்றனர். ஹெச்.ராஜா என்பவர் சமீபத்தில் திருமா தொட்ட கட்சியை யாரும் தொட மாட்டர்கள் என பேசியிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ” தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது.

தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு இறுதிச் சடங்கை செய்யத்தான் உதவுமே ஒழிய, எவ்வித வளர்ச்சியையும் பெற்றுத் தரப் போவதில்லை என்பதைத் தமிழகப் பாரதிய ஜனதா கட்சியினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் மக்கள் செல்வாக்கினைப் பெற்றிருக்கிற ஒரு அரசியல் பேரியக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அது அடித்தட்டு விளிம்பு நிலை மக்களுக்காகவும், மண்ணின் உரிமை மீட்புக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதனைக் குறை சொல்வதற்கோ, விமர்சிப்பதற்கோ பாஜகவிற்கு எவ்விதத் தகுதியும் இல்லை.

தமிழகத்தில் ஒரு கட்சி மக்களாலும், பிற கட்சிகளாலும் தீண்டத்தகாதக்கட்சியாக ஒதுக்கித் தள்ளப்பட்டுத் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறதென்றால் அது பாஜகதான். அக்கட்சியானது, தமிழகம் முழுவதும் கிளைப் பரப்பி மண்ணின் மக்களுக்கான அரசியலை செய்து வரும் விடுதலைச்சிறுத்தைகளைத் தீண்டத் தகாத கட்சியென்று கூறுவது நகைப்புக்குரியது.

வடநாட்டில் இருந்து தமிழகத்திற்குப் பிழைக்க வந்து தமிழர்களின் தயவிலும், பெருந்தன்மையிலும் வாழ்ந்துகொண்டு மண்ணின் மக்களை இழித்துரைத்துப் பேசிவிட்டு எச்.ராஜா சர்மா போன்றோர் பாதுகாப்பாக வீடு திரும்ப முடிகிறதென்றால் தமிழர்கள் உயரியச் சனநாயகவாதிகள் என்பது மட்டும்தான் அதற்குக் காரணம். ஆகவே. எச்.ராஜா இதுபோன்ற பேச்சுக்களை இத்தோடு நிறுத்திக் கொள்வதுதான் அவருக்கும், அவரது கட்சிக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

அண்ணன் திருமாவளவன் குறித்துக் கூறிய கருத்தை எச்.ராஜா உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும், அக்கருத்துக்குப் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச். ராஜாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in

TAGS: