ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளதுடன், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, ஆலை இயங்குவதற்கான அனுமதியை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலை மூடப்பட்டதற்காக தமிழக அரசு தெரிவித்த காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிக்கவும் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

அடுத்துவரும் மூன்று வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான பணிகளை தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் மேற்கொள்ளவேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ள நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உறுதிபட பேசிவருகின்றனர்.

சேலத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் மேல்முறையீடு செய்வது உறுதி என்று அறிவித்தார். அதேபோல, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வதில் எந்த தயக்கமும் இல்லை என்று குறிப்பிட்டனர்.

ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சட்டரீதியாக அரசு எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார் மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது என்றும் அந்த ஆலை திறக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் கூறினார்.

தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக ஆலை நிர்வாகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி எம்.இசக்கியப்பன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட்

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அறிவியல்பூர்வமான ஆதரங்களை அடிப்படையாக கொண்டு தரப்பட்ட தீர்ப்பு என்று கூறிய இசக்கியப்பன் அந்த தீர்ப்பு முற்றிலும் பாரபட்சமில்லாமல் தரப்பட்டது என்று கூறியுள்ளார். ”எங்களது வாழ்வாதாரம் எங்களுக்கு திரும்பவந்துவிட்டது என்பதில் மகிழ்ச்சி. சட்டரீதியாக இந்த தீர்ப்பில் கூறியபடி ஆலையை இயக்குவோம்,” என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் இசக்கியப்பன்.

மேலும் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆலை திறப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக வெளியிட்டுள்ள கருத்து குறித்து கேட்டபோது, தேசிய தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள உத்தரவின் பேரில் சட்டரீதியாக இயங்க அரசிடம் பேசவுள்ளதாக தெரிவித்தார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழு பொது மக்களின் அச்சத்தைப் போக்கி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம் என்று நவம்பர் மாத இறுதியில் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது.

முன்னதாக அந்த நிபுணர் குழு ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி, அதற்கு எதிராக பொதுமக்கள் போராடிவந்த நிலையில், மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசால் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையில் இருப்பதால், தமிழக அரசு மேல்முறையீடு செய்தாலும், ஜனவரி 2, 2019 வரை அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. -BBC_Tamil

TAGS: