கடந்த நான்காண்டுகளில் மட்டும் சௌதி அரேபியா உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
டிசம்பர் 12, 2018 அன்று மக்களவையில், குளிர்கால கூட்டத்தொதொடரின் கேள்வி நேரத்தின்போது, வளைகுடா நாடுகளில் அதிகளவில் உயிரிழந்து வரும் இந்தியர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், “2014 முதல் 2018ஆம் ஆண்டுவரை பதிவுசெய்யப்பட்டுள்ள தரவுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த நான்காண்டுகளில் மிக அதிகபட்சமாக சௌதி அரேபியாவில் மட்டும் 12,828 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் வெளியிட்ட தகவல் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அதற்கடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7,877 பேரும், குவைத்தில் 2,932 பேரும், ஓமனில் 2,564 பேரும், கத்தாரில் 1,301 பேரும், குறைந்தபட்சமாக பஹ்ரைனில் 1,021 பேரும் உயிரிழந்துள்ளதாக வி.கே.சிங் வெளியிட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழப்பிற்கான முக்கிய காரணம் என்ன?
“வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் தற்கொலை, சாலை விபத்துக்கள் போன்றவற்றால் உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில் அங்குள்ள இந்திய தூதரகங்கள் வழியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, மேற்கண்ட நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளான அதிக நேரம் பணிபுரிவது, மருத்துவ வசதி பற்றாற்குறை, அதிகமான வெயிலால் ஏற்படும் பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இந்திய அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் அதிகளவிலான இந்தியர்கள் பணிபுரிவதால் அவர்களது பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் மத்திய அரசின் இணையதள குறைத்தீர்ப்பு சேவையான “MADAD”யில் தங்களது பிரச்சனைகளை எழுப்பி, தீர்வு பெறலாம் என்று மத்திய அரசின் தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
“பெரியளவில் படிப்பறிவு தேவையில்லை, ஆங்கில அறிவு அவசியமில்லை, கை நிறைய சம்பளம், வருடத்திற்கு ஒரு மாதம் விடுமுறை, தங்குமிடம்-உணவு இலவசம்” போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி தங்களது சொந்த ஊரில் வேலையில்லாதவர்கள் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போக்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
உண்மையிலேயே வளைகுடா நாடுகளில் என்ன நடக்கிறது? கிட்டத்தட்ட 30,000 இந்தியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் உயிரிழப்பதற்கு என்ன காரணம்? வேலைத் தேடி செல்பவர்கள் சம்பாதிக்கிறார்களா அல்லது முதலீடு செய்த பணத்தையும், வாழ்வாதாரத்தையும் இழக்கிறார்களா?
“பாஸ்போர்ட்டை பிடுங்கி, பாலைவனத்தில் விட்டனர்”
அரபு நாடுகளில் பெரும் பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்தில் பல லட்சங்களை செலவழித்து அங்கு செல்லும் பலர், மீண்டும் திரும்பி வரமுடியாமல், சிக்கி தவித்து ஒரு கட்டத்தில் உயிரிழப்பவர்கள் மத்தியில், மேற்குத் தமிழகத்தில் உள்ள ஒரு சிறுநகரமான தாராபுரத்திலுள்ள ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உயிர் பிழைத்தால் போதும் என்று இரண்டே மாதத்தில் சௌதி அரேபியாவிலிருந்து திரும்பிவிட்டதாக கூறுகிறார்.
- சௌதி அரேபியா: முடிவுக்கு வந்தது பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை
- சௌதி அரேபியா: சினிமா திரையிட திடீர் அனுமதி ஏன்?
“எனது நண்பர்கள் மூலம் மதுரையிலுள்ள, மும்பையை தலையிடமாக கொண்டு செயல்படும் ஏஜெண்டின் தொடர்பு கிடைத்தது. டைல்ஸ் பதிக்கும் தொழிலை மேற்கொண்டு வரும் நான் அதே வேலை சௌதி அரேபியாவில் வேண்டுமென்று கேட்டேன். வேலை வாங்கித்தருவதாக உறுதிமொழி அளித்துவிட்டு, முன்பணமாக ஒரு லட்சமும், பிறகு விசா, விமான பயணச்சீட்டுகளுக்காக ஐம்பது ஆயிரம் மேலாக வாங்கிக்கொண்டனர். மாதத்திற்கு சுமார் 70-75 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்ற கூறிய நம்பிக்கையில் கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து பெருங்கனவுடன் சௌதி அரேபியாவில் காலடி வைத்தேன். ஆனால், மறுநிமிடமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துசெல்வதற்கு வந்திருந்த ஒருவர் எனது பாஸ்போர்ட்டை அங்கேயே பிடுங்கிக்கொண்டார். விமான நிலையத்திலிருந்து சுமார் ஐந்து மணிநேரம் காரில் பாலைவனத்தை ஒட்டிய பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு மிகப் பெரிய மனித நடமாட்டமற்ற பங்களாவை காட்டி, இதை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்” என்று தழுதழுத்த குரலில் தனது வேதனையான அனுபவத்தை விளக்குகிறார் கார்த்திகேயன்.
பாஸ்போர்ட்டை பிடுங்குவது, உறுதியளித்த வேலையை, வசதியை செய்ய மறுப்பது போன்றவை குறித்து சௌதி அரேபியாவிலிலுள்ள இந்திய தூதரகத்தில் புகார் அளித்தீர்களா என்று அவரிடம் கேட்டபோது, “நான் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு சாலையை அடைவதற்கே ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். பேருந்து வசதியற்ற அந்த பகுதியிலிருந்து நகரத்தை அடைவதற்கு கார் மட்டுமே ஒரே வழியாக இருப்பதால், அங்கேயே முடங்கிவிட்டேன். அந்த சூழ்நிலையில், இந்திய தூதரகம் உள்ளிட்ட யாரையும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை, அப்படி முயற்சி செய்தாலும் பயனில்லை என்பதால் வீட்டிற்கு போன் செய்து நான் உடனடியாக திரும்ப உள்ளதாக கூறினேன்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஆடு, மாடு மேய்த்த பி.இ பட்டதாரிகள்
சௌதி அரேபியாவுக்கு சென்ற ஒரே வாரத்தில் அங்கிருந்து புறப்பட நினைத்தும் ஏன் தமிழகம் வருவதற்கு இரண்டு மாதங்களானது என்று அவரிடம் கேட்டபோது, “முதல் மாதம் சம்பளம் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று காத்திருந்தேன். மாதம் 75 ஆயிரம் சம்பளம் என்று ஏஜெண்டுகள் கூறிய நிலையில், உணவு போன்றவற்றை கழித்துக்கொண்டு எனக்கு கையில் கிடைத்தது வெறும் 15 ஆயிரம் ரூபாய்தான். மேலும், அங்கிருந்து தமிழகம் திரும்புவதற்கு விசா, விமான பயணச்சீட்டு ஆகியவற்றை பெறுவதற்கு ஒன்றரை லட்சம் செலவழித்து அங்கிருந்து புறப்படுவதற்கு இரண்டு மாதமாகிவிட்டது” என்று கார்த்திகேயன் கூறுகிறார்.
“ஒருநாள் நான் வேலை பார்த்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்றபோது, ஆச்சர்யமளிக்கும் வகையில் தமிழில் பேசும் இளைஞர்களை சந்திக்க நேர்ந்தது. தமிழகத்தில் பெரிய கல்லூரிகளில் பி.இ படித்த அந்த இளைஞர்கள் அங்கு வாழ்க்கையே நொந்துபோய் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். தங்களுக்கு சொந்த ஊருக்கே சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க விரும்புவதாகவும், ஆனால் இங்கிருந்து தப்ப முடியவில்லை என்றும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்” என்று வேதனையுடன் கூறிய கார்த்திகேயன் இதுபோன்று மிகுந்த வேலைப்பளு, மன அழுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல இயலவில்லை என்பதால் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அங்கேயே புதைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சியளிக்கிறார்.
“மொழி, கலாசாரம், காலநிலை என ஒண்ணுமே தெரியாத நாட்டில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்க செத்து பிழைப்பதற்கு, சொந்த ஊரில் குடும்பத்தோட சேர்ந்து இருந்து 250 ரூபாய் சம்பாதிப்பது எவ்ளோ மேல்,” என்று தனது வேதனையை நம்முடன் பகிர்ந்து கொண்டார் கார்த்திகேயன்.
“அரேபியர்களின் வீடுகளில் பணிபுரிபவர்களின் நிலையை விவரிக்க முடியாது”
“துபாயில் எனக்கு வேலை கிடைத்தவுடனேயே அதற்கு காரணமாக இருந்த நண்பருக்கு வேலை பறிபோனதுடன் அவர் ஒரே மாதத்தில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அந்நாட்டின் பணிப்பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், மன அழுத்தத்தையும் எனக்கு உண்டாக்கியது. அதுமட்டுமின்றி, நமது சிறிய வயதிலிருந்து எதிரிகளாக சொல்லி வளர்க்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 12 பேருடன் 13வதாக என்னையும் ஒரே வீட்டில் தங்க வைத்தபோது எனக்கு பயமும், பதற்றமும் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் உடனடியாக காட்ட தொடங்கிய அன்பு, அவர்களை பற்றிய மனநிலையை மாற்றியதுடன், நான் துபாயில் தொடர்ந்து இருப்பதற்கும் உதவியது” என்று கூறுகிறார் தற்போது துபாயில் வசிக்கும் திருச்சியை சேர்ந்த மது ரஞ்சனி.
யேமன் போர்: சௌதிக்கான ராணுவ ஆதரவை விலக்க அமெரிக்கா தீர்மானம்
பருவநிலை மாற்றம்: கடமையை மறுக்கும் நாடுகள் – நடப்பது என்ன?
தற்போது துபாய் அரசின் உதவிபெறும் நிறுவனமொன்றில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் இவர், அந்நாட்டில் அரேபியர்களின் வீடுகளில் ஓட்டுநர்களாக, சமையல் செய்பவர்களாக, உதவியாட்களாக வேலை செய்பவர்கள் மிகவும் மோசமாக, தரக்குறைவாக நடத்தப்படுவது வாடிக்கையான ஒன்று என்றும் தாங்கள் இங்கு வருவதற்கு முதலீடு செய்த பணத்தையாவது சம்பாதித்துக்கொண்டு ஊருக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் பலர் பணிபுரிந்து வருவதாகவும் கூறுகிறார்.
“துபாயை பொறுத்தவரை அரசாங்க நிறுவனத்திலோ அல்லது அரசு உதவிபெறும் நிறுவனத்திலோ அலுவலக வேலை செய்பவர்களுக்கு நல்ல ஊதியமும், விடுமுறையும், பணிப்பாதுகாப்பும் கிடைக்கிறது. ஆனால், வளைகுடா நாடுகளுக்கு போதிய படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகளவில் வருவதால், அவர்கள் மேற்கண்ட எதையும் எதிர்பார்க்க முடியாது. நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்களாக பணிபுரிபவர்களுக்கு அதிக பணிநேரம், மன அழுத்தம், பணிப்பாதுகாப்பின்மை போன்றவை பிரச்சனைக்குரியவைகளாக இருந்தால், அரேபியர்களின் வீடுகளில் பணியாற்றுபவர்கள் கார் ஓட்டுவது முதல் உரிமையாளர்களின் வீட்டு கழிவறையை சுத்தம் செய்வது வரை அனைத்து வேலைகளையும் வலுக்கட்டாயத்தின் பேரில் செய்யும் நிலை உள்ளது” என்று அவர் விவரிக்கிறார்.
இந்தியர்கள் போன்ற வெளிநாடுகளை சேர்ந்த பணியாளர்களுக்கு இருக்கும் சட்டரீதியான பாதுகாப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, “ஒரு பணியாளருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றாலோ, தரக்குறைவாக நடத்தப்பட்டாலோ அல்லது வேறெதாவது பிரச்சனை இருந்தாலோ அவருக்கு உதவி புரியும் வகையில் துபாயில் சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், அவற்றை அணுகி நீதியை நிலைநாட்டுவதற்கு செலவிட வேண்டிய பணம், நேரம் ஆகியவற்றை கருதி தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பொறுத்துக்கொண்டு இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
பணியிடத்தில் நடத்தப்படும் விதமும், காலநிலையும் இங்கு பணிபுரியும் பலரை சொந்த ஊரை நோக்கி இழுத்தாலும், தங்களது குடும்பத்தின் எதிர்காலத்தை எண்ணி தொடர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு கட்டத்தில் நோய்வாய்ப்பட்டோ அல்லது தற்கொலை செய்துகொண்டோ இறக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக மது ரஞ்சனி கூறுகிறார்.
பெண்கள் பாதுகாப்பு
“கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக துபாயில் பணிபுரிந்து வரும் எனக்கு, இதுவரை எவ்விதமான பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. துபாயில் ஆண்களைவிட, பெண்கள் எழுப்பும் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, பெண்ணொருவரை தெரியாமல் இடித்துவிட்டால் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில், அதை பிரச்சனையாய் எழுப்பும்பட்சத்தில் அந்த ஆண் அதிகபட்சமாக நாடு கடத்தப்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது” என்று மது கூறுகிறார்.
ஆனால், பொதுவாக இரவு நேரத்தில் வெளியில் அதிகம் செல்லாத தான், ஒருமுறை நண்பர்களுடன் சென்றபோது அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறுகிறார். “பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சாலைகளிலேயே பளீச்சென ஆடைகளை உடுத்திக்கொண்டு நிற்பதும், அவர்களை கார்களில் வரும் முன்பின் தெரியாதவர்கள் சர்வசாதாரணமாக அழைத்துச்செல்வதையும் பார்த்தபோதுதான் துபாயில் தடைசெய்யப்பட்ட பாலியல் தொழில் கொடிகட்டி பறப்பது அதிர்ச்சியடைய வைத்தது. எனவே, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெளியில் சென்றால் எந்த பெண் வேண்டுமானாலும், பிரச்சனையில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளதாக நான் எண்ணுகிறேன்” என்று அவர் கூறுகிறார்.
“சுமார் இருபத்தைந்து வருடங்களாக சௌதி அரேபியாவில் பணிபுரிந்த எனது தந்தை இரண்டாண்டுகளுக்கு முன்பு அங்கேயே மாரடைப்பால் இறந்துவிட்டார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாங்கள் எங்களது தந்தையின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கு பல்வேறு மத்திய, மாநில அரசுத்துறைகளை அணுகியும் எவ்வித பலனும் அளிக்காததால் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் கையூட்டு கொடுத்து தந்தையின் உடலை அவர் இறந்து 43 நாட்களுக்கு பின்பு கொண்டுவந்தோம்” என்று தனது மோசமான அனுபவத்தையும் விளக்குகிறார். -BBC_Tamil