ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் நடந்த சண்டையில், நான்கு பேர் இறந்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள, சர்னுா என்ற கிராமத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அப்பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவத்தினரை நோக்கி, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.இருதரப்புக்கும் நடந்த சண்டையில், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.இதையடுத்து, பாதுகாப்பு வீரர்கள் நடத்திய தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.ஏராளமான இளைஞர்கள் திரண்டு, ராணுவத்தினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில், போராட்டக்காரர்கள், வன்முறையில், ஈடுபட்டனர்.போராட்டத்தை கட்டுப் படுத்த, ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ஏழு பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து, அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. புல்வாமா மாவட்டத்தில், இணையதள சேவை, முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் – ஜம்மு இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, காஷ்மீர் முன்னாள் முதல்வர், ஒமர் அப்துல்லா கூறுகையில், ”போராட்டக்காரர்களை, ராணுவத்தினர் சரியாக கையாளததால், உயிர் பலி ஏற்பட்டுள்ளது,” என்றார்.
-dinamalar.com