பொன் மாணிக்கவேல் அதிரடி ஆரம்பம்.. இந்து அறநிலையத்துறை அதிகாரி திருமகள் கைது

சென்னை: இந்து அறநிலையத் துறை அதிகாரி திருமகளை சிலை தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலும் ஒன்று. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் தேவார பாடல் பெற்ற தலம். மயில் உருவம் பெற்ற பார்வதி தேவி திருமயிலை தலத்தில் புன்னை மரத்தடியில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

இதை உணர்த்தும் வகையில் புன்னைவன நாதர் சன்னதியில் மயில் வடிவிலான அம்பாள் அலகில் மலரை ஏந்தியபடி சிவனுக்கு பூஜை செய்யும் மிகப் பழமையான சிலை இருந்தது.

புதிய சிலை

இந்த கோவிலில் 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அப்போது திருப்பணி நடந்த போது மயில்சிலை சேதமடைந்து விட்டதாக கூறி புதிய சிலையை நிறுவி இருக்கிறார்கள். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ‘பழமையான மயில் சிலை மாயமாகி 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை புகார் கூட தெரிவிக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

யாருக்கும் தெரியவில்லை

இதையடுத்து, கோர்ட்டுக்கு அறிக்கை கொடுப்பதற்காக அறநிலையத்துறை தகவல் திரட்டிய போது அலகில் மலருடன் கூடிய மயில் சிலைக்குப் பதிலாக அலகில் பாம்புடன் கூடிய மயில் சிலை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பழைய சிலை என்ன ஆனது என்பது குறித்த விபரங்கள் யாருக்கும் தெரியவில்லை.

விசாரணை

2004-ல் கும்பாபிஷேகம் நடந்த போது பழமையான மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பழைய மயில் சிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸார்

இந்நிலையில் மயில் சிலை மாயமான வழக்கில் திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று கைது செய்தனர். திருமகளை கும்பகோணம் நீதிமன்றத்துக்கு போலீஸார் அழைத்து சென்றனர்.

அதிரடி ஆட்டம்

பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்றாலும் அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. தனக்கு ஒதுக்கப்பட்ட ஓராண்டுக்குள் சிலைகளை கண்டுபிடிப்பேன் என கூறியுள்ளார். அதன்படி திருமகளின் கைது செய்ததன் மூலம் பொன் மாணிக்கவேலின் அதிரடி ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.

tamil.oneindia.com

TAGS: