கீரமங்கலம் அறிவொளி நகர் மக்கள் கஜா புயல் தாக்குதலில் வீடுகளை இழந்து மரத்தடியிலும், தெரு ஓரங்களிலும் வசிக்கின்றனர். நிவாரணம் என்ற பெயரில் கொடுக்கப்பட்ட பழைய துணிகளையே உடுத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய நேரத்தில் கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகரில் ( நரிக்குறவர் காலனி ) இருந்த 54 வீடுகளில் காலனி வீடுகுள் உள்பட ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் என பல வீடுகள் மரங்கள் விழுந்தும் காற்றின் வேகத்திலும் உடைந்து நாசமானது. இதனால் தங்கள் உடைமைகளை இழந்து மழையில் நனைந்தும், இடிந்த குடிசைகளுக்குள்ளும் இருந்துள்ளனர். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் உணவுக்கே திண்டாட்டமாக இருந்த நிலையில் ஒரு முறை ரேசன் அரிசி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த வழியாக வெளியூர்களுக்கு நிவாரணம் கொடுக்கச் சென்றவர்கள் கொடுக்கும் உணவு, மெழுகுவர்த்தி போன்ற நிவாரணப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வளவு பாதிப்பு உள்ள அறிவொளி நகருக்குள் எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. இடிந்த வீடுகளை, குடிசைகளை சீரமைக்க முடியாமல் பிளாஸ்டிக் சீட்டுகள் மூலம் கொட்டகை அமைத்தும் இடிந்த வீடுகுளின் மேல் தார்பாய் பொருத்தியும் வைத்து எஞ்சிய பொருட்களை பாதுகாத்தாலும் தங்க இடமின்றி மரத்தடியிலும், தெரு ஓரங்களிலும் தூங்குகின்றனர். நிவாரணமாக அவர்களுக்கு பழைய துணிகளே கிடைத்துள்ளது. அதிலும் பல கிழிந்த துணிகள். அவற்றை பிரித்து பலரும் உடுத்தி வருகின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூறும் போது.. 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டிக் கொடுத்த வீடுகளும் உடைந்து விட்டது. தற்போது எஞ்சி இருந்த வீடுகளும் புயலுக்கு உடைந்து கொட்டிவிட்டது. எங்களை யாரும் வந்து பார்க்கவும் இல்லை அரசு நிவாரணம் எதுவும் கிடைக்கவும் இல்லை. எங்கள் வீடுகளை அரசாங்கம் சீரமைத்து கொடுத்தால் மழைகளில் இருந்து எங்கள் குழந்தைகளை காப்பாற்ற முடியும். இல்லை என்றால் மழைக்கும் மரத்தடியில்தான் இருக்க வேண்டும். மழையிலும், பனியிலும் நனைந்து குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. நிவாரணம் கொடுப்பதுடன் எங்கள் தொழிலுக்கு பாசி மணி விற்கவும் உதவிகள் செய்ய வேண்டும் என்றனர்.
-nakkheeran.in