ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக.. தந்தை வழியில் தனயன் ஸ்டாலின்!

சென்னை: நேருவின் மகளே வருக, நல்லாட்சி தருக என கருணாநிதி இந்திராகாந்திக்கு அழைப்பு விடுத்தார். அது போல் ஸ்டாலின் , ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவை தொடர்ந்து ராயப்பேட்டையில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தபோது என் மனதில் ஒரு நினைவலைகள் ஓடியது. 1961-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றயது.

அப்போது ஜிம்கானா கிளப்பிற்கு பக்கத்தில் காமராஜர் சிலையை திறந்து வைத்தோம். அந்த சிலையை திறந்து வைத்தது பிரதமர் நேரு. இன்று 2018-இல் நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தியை கருணாநிதி சிலையை திறந்து வைத்துள்ளார்.

கனவு நனவு

இதனால் நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரித்து போய் இருக்கிறேன். தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இன்று முக்கியமான நாள், ஏன் மறக்க முடியாத நாள் ஆகும். இன்று நீதி கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம். தந்தை பெரியாரின் கனவை நனவாக்கியிருக்கிறோம்.

50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி

ஒரு நாட்டினுடைய சமூக நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டால் பொருளாதாரம் சீரழிந்து விட்டால் அதனை சரி செய்வது சாதாரண காரியம் அல்ல. மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி போயுள்ளது. இன்னும் 50 ஆண்டுகள் இவரை ஆட்சி செய்ய விட்டுவிட்டால் இந்தியா 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிடும்.

பகிரங்கம்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடுக்கு மோடி இரங்கல் தெரிவிக்கிறார். போர்ச்சுக்கல் நாட்டு காட்டுத் தீ குறித்து மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவிக்கிறார். நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சையில் இறந்து போனவர்களுக்கு மோடி இரங்கல் தெரிவிக்க மறுக்கிறார். மோடி சேடிஸ்ட் மனப்பாங்கோடு உள்ளார் என்பதை பகிரங்கமாக சொல்கிறேன்.

மமதை மோடி

தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித் துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி. சமூக நீதிக்கு மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. வேறு பாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். பரம்பரை மன்னர் என்ற மமதையுடன் மோடி ஆட்சி நடத்துகிறார்.

நல்லாட்சி

வேறுபாடற்ற சமூகம் ஏற்பட நாங்கள் ஒன்று திரண்டுள்ளோம். இந்தியாவை காக்கக் கூடிய ஜனநாயகத்திற்கு நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம். ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன். நாட்டை ராகுல் காப்பாற்ற வேண்டும். ராகுல் காந்தியே வருக நல்லாட்சி தருக என்றார்.

tamil.oneindia.com

TAGS: