1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தமது சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கு ஒன்றில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.
34 வருடத்திற்கு பிறகு சஜ்ஜன் குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 2013-ல் டெல்லியில் உள்ள ஒரு கீழமை நீதிமன்றத்தில் டெல்லியில் ஐந்து சீக்கியர்களை கொன்ற வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.
”1947-ல் பிரிவினையின் போது மிகப்பெரிய படுகொலை நடந்தது. அதன்பின்னர் 37 ஆண்டுகள் கழித்து டெல்லி மீண்டும் அதேபோன்றதொரு நிகழ்வை கண்டது. அரசியல் ஆதரவுடன் அவர்கள் விசாரணையில் இருந்து தப்பியுள்ளார்கள்” என தீர்ப்பில் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
- மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்கும் கமல்நாத்தை துரத்தும் சர்ச்சைகள்
- சென்னையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததாக ஐ.டி. இளைஞர் கைது
சஜ்ஜன் குமாருக்கு நீதிமன்றம் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இவ்வழக்கில் பல்வான் கோக்கர், பாக்மல், கிரிதரி லால் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சஜ்ஜன் குமார் மீதான வழக்கு என்ன?
1984 அக்டோபர் 31-ல் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்ட பின் சீக்கியர்களுக்கு எதிராக மூண்ட கலவரத்தில், டெல்லி கண்டோன்ட்மென்ட் பகுதியில் ஐந்து சீக்கியர்கள் கொல்லப்பட்டது வழக்கு இது. கெஹர் சிங், குர்ப்ரீத் சிங், ரகுவிந்தர் சிங், நரேந்திர பால் சிங் மற்றும் குல்தீப் சிங் ஆகிய ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.
2005-ல் நீதிபதி நானாவதி கமிஷன் பரிந்துரை செய்ததன்படி சஜ்ஜன் குமார் மற்றும் சில குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜனவரி 2010-ல் சிபிஐ குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இரண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தனது தந்தை உயிருடன் கொளுத்தப்பட்டதை நேரில் கண்ட நிர்ப்ரீத் கவுரிடம் பிபிசி பஞ்சாபியின் சரப்ஜித் தலிவாலிடம் பேசினார். ” நீதிபதி மற்றும் விசாரணைக் குழுவுக்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தீர்ப்பு முன்னமே வந்திருந்தால் நான் இவ்வளவு மனக்காயங்களை சந்திக்க வேண்டி இருந்திருக்காது. மரண தண்டனையாக இருந்தால் அது குறிப்பிட்ட தருணத்தில் முடிந்துபோயிருக்கும் விஷயமாக இருக்கும். அதனால் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் நிர்ப்ரீத் . -BBC_Tamil